நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்யலாம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்


நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்யலாம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 29 July 2018 3:00 AM IST (Updated: 28 July 2018 5:51 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயன்பெற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

 

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயன்பெற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

நுண்ணீர் பாசனம்

பாசன நீரை சேமிக்க உதவும் நுண்ணீர் பாசனத்திட்டம், முதல்–அமைச்சர் ஆணைப்படி தமிழக அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் இதற்காக வழங்கப்படுகிறது. விவசாயிகள் செலுத்த வேண்டிய நுண்ணீர் பாசன அமைப்புகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை தமிழக அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் இந்த திட்டம் நடப்பு நிதி ஆண்டில் 2லட்சத்து 66 ஆயிரத்து 953 எக்டர் பரப்பளவில் ரூ.1,586 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயிர் வாரியாக வழங்கப்படும் அதிகபட்ச மானியம் (சரக்கு மற்றும் சேவை வரி உட்பட) சிறு, குறு விவசாயிகளுக்கு எக்டருக்கு வாழைக்கு ரூ.81 ஆயிரத்து 135–ம், கரும்புக்கு ரூ 97 ஆயிரத்து 134–ம், காய்கறி பயிருக்கு ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 133–ம், தென்னைக்கு ரூ.27 ஆயிரத்து 770–ம் வழங்கப்படுகிறது.

இதர விவசாயிகளுக்கு வாழைக்கு ரூ.63 ஆயிரத்து 25–ம், கரும்புக்கு ரூ.75 ஆயிரத்து 452–ம், காய்கறி பயிருக்கு ரூ.87 ஆயிரத்து 880–ம், தென்னைக்கு ரூ.21 ஆயிரத்து 572–ம் வழங்கப்படுகிறது.

அதே போல் சிறு, குறு விவசாயிகளுக்கு தெளிப்பு நீர் பாசனம் அமைத்திட எக்டருக்கு மாற்றத்தக்க தெளிப்பான் கருவிகள் எனில் ரூ.20 ஆயிரத்து 866–ம், மழைத்தூவான் கருவிகள் எனில் ரூ.30 ஆயிரத்து 498–ம், இதர விவசாயிகளுக்கு தெளிப்பான் கருவிகள் எனில் ரூ.16 ஆயிரத்து 208–ம், மழைத்தூவான் கருவிகள் ரூ.23 ஆயிரத்து 690–ம், மானியமாக வழங்கப்படுகிறது.

இணையதளத்தில் பதிவு

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் ஆதார் அட்டை, அடங்கல், கம்ப்யூட்டர் சிட்டா, நில வரைபடம், சிறு–குறு விவசாயிகளாக இருப்பின் தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட சான்று ஆகிய ஆவணங்களுடன் தாங்களாகவே

www.tnhorticulture.tn.gov.in/horti/mimis என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அல்லது வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story