தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: சி.பி.சி.ஐ.டி. போலீசார் 300–க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் 300–க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் 300–க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி சூடுதூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22–ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரம் காரணமாக போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். இது தொடர்பான 5 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜா தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் உள்ளிட்ட 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசார் போதிய ஆவணங்கள் சேகரித்து உள்ளனர்.
தொடர் விசாரணைஅந்த ஆவணங்கள் அடிப்படையில் சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 25 நாட்களாக சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது. இதில் துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியாற்றிய போலீசார், காயம் அடைந்தவர்கள், வெளி மாவட்ட போலீசார், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என சுமார் 300–க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து சாட்சிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.