கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து


கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து
x
தினத்தந்தி 29 July 2018 4:30 AM IST (Updated: 28 July 2018 8:40 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

கன்னியாகுமரி,

 சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்கள் கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்வையிடுவதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல், நேற்று காலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இந்தநிலையில், நேற்று காலையில் கன்னியாகுமரியில் கடல் சீற்றம் ஏற்பட்டது. கடலில் 10 முதல் 15 அடி உயரம் வரை அலைகள் எழுந்து பாறையில் பயங்கரமாக மோதின. இதனால், சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க போலீசார் தடை விதித்தனர். மேலும், போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சென்று யாரும் கடலில் இறங்காதவாறு எச்சரித்து அனுப்பினர்.

விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்கப்படும் படகு போக்குவரத்து தொடங்கவில்லை. இதனால், நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதையடுத்து காலை 9.30 மணியளவில் கடல் சீற்றம் சற்று குறைந்தது. இதனால் 1½ மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதே நேரத்தில் திருவள்ளுவர் சிலைக்கு போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.

Next Story