தஞ்சையில் பயங்கர தீ விபத்து 19 வீடுகள் எரிந்து நாசம் சிலிண்டர்கள் வெடித்து சிதறின


தஞ்சையில் பயங்கர தீ விபத்து 19 வீடுகள் எரிந்து நாசம் சிலிண்டர்கள் வெடித்து சிதறின
x
தினத்தந்தி 29 July 2018 4:45 AM IST (Updated: 28 July 2018 10:25 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் நடந்த தீ விபத்தில் 19 வீடுகள் எரிந்து நாசமடைந்தன. கியாஸ் சிலிண்டர்களும் வெடித்து சிதறின. தீ விபத்தில் ரூ.50 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.

தஞ்சாவூர்,

தஞ்சை மேட்டு எல்லையம்மன் கோவில் தெரு பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. அதில் கூரைவீடுகளும் அதிக அளவில் இருந்தது. இந்த பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் நெருக்கமாக அமைந்துள்ளன. நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் குடிசை தீ பற்றி எரிந்தது.

அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென அருகில் இருந்த மற்ற குடிசை வீடுகளுக்கும் பரவியது. அப்போது வீட்டில் படுத்திருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்து அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். அப்போது வீடுகளில் இருந்த கியாஸ் சிலிண்டரும் வெடித்து சிதறியது.


இதனால் டமார், டமார் என சத்தம் கேட்டது. மேலும் அருகில் உள்ள பொதுமக்கள், இளைஞர்கள் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்தது. இதனால் யாராலும் அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தஞ்சை மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் உதவி மாவட்ட அலுவலர் இளஞ்செழியன், நிலைய அலுவலர் திலகர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைக்கும் வாகனத்தில் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மின்சார ஊழியர்களும் அங்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜெயச்சந்திரன், தஞ்சை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.


1½ மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இதில் பால்ராஜ், அம்சவல்லி, ராஜா, பாலகிருஷ்ணன், விஜயவள்ளி, லட்சுமி, விஜயலட்சுமி, தேவேந்திரன், கணேசன், கோவிந்தராஜ், லட்சுமி, ராமகிருஷ்ணன், ராகவன், கேசவன், ராம்குமார், தனபால், பக்கிரியம்மாள், ஜெயக்குமாரி, ரேவதி ஆகிய 19 பேரின் வீடுகளும் எரிந்து சாம்பலாயின.

இதில் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, பணம், நகை, பொருட்கள், துணிமணிகள், பள்ளிப்பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாயின. மேலும் 1 சைக்கிள், 2 ஸ்கூட்டர்கள், 2 மோட்டார்சைக்கிள்களும் எரிந்து நாசமாயின. தீ விபத்தில் வீடு மற்றும் உடமைகளை இழந்தவர்கள் கதறி அழுதனர்.


அதிகாலை நேரத்தில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் வீட்டில் இருந்தவர்கள் விழித்துக்கொண்டு வெளியே ஓடி வந்ததால் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்தின் சேதமதிப்பு ரூ.50 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து தஞ்சை நகர கிழக்குப்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீ விபத்து ஏற்பட்டதில் ஒரு வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது பட்டு சாலையில் வந்து விழுந்தது. மேலும் அங்கிருந்த 3 வீடுகளிலும் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறி உள்ளது. இந்த சத்தம் அருகில் உள்ள மற்ற 2 தெருவுக்குள் வரை கேட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சத்தம் கேட்ட திசையை நோக்கி ஓடி வந்தனர். அப்போது தான் தீ விபத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது தெரிய வந்தது. தீ விபத்தில் ஒரு வீட்டில் உள்ள கெடிகாரம் நேற்று அதிகாலை 5.30 மணியிலேயே நின்றுவிட்டது.

தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்கள் அனைவரும் கதறி அழுதபடியே இருந்தனர். அவர்களுக்கு போலீஸ்துறை சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், தஞ்சை நகர கிழக்குப்போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோர் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் காலை உணவுகளை வழங்கினர். இதே போல பல முஸ்லிம் அமைப்புகள், தன்னார்வலர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடை போன்றவற்றை வழங்கினர். மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை பல்வேறு கட்சிபிரமுகர்கள் வந்து பார்த்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

தீ விபத்தில் முருகேசன் என்பவரின் வீடும் தீயில் எரிந்து சாம்பலானது. முருகேசனின் மனைவி லட்சுமி (வயது42). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான ராஜேஸ்வரிக்கு, மாப்பிள்ளை பார்த்து அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

இதற்காக 10 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வீட்டில் வைத்திருந்தனர். மேலும் திருமணத்துக்கு தேவையான பட்டுப்புடவைகள் உள்ளிட்டவற்றையும் வாங்கி வீட்டில் வைத்து இருந்தனர். தீ விபத்தில் நகை, பணம், புடவை உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலானது. மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த லட்சுமியின் மகன் ராஜேஷ்குமாரின் இருசக்கர வாகனமும் எரிந்து சாம்பலாகி விட்டது.

இதைப்பார்த்த அந்த குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். தீ விபத்தில் தனது மகளின் திருமணத்துக்கு சேர்த்து வைத்த நகை,பணம், புடவைகள் எரிந்ததை பார்த்து லட்சுமி கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Next Story