போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.5 லட்சம் மின்சாதன பொருட்களை பெற முயற்சி 3 பேர் கைது


போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.5 லட்சம்  மின்சாதன பொருட்களை பெற முயற்சி 3 பேர் கைது
x
தினத்தந்தி 29 July 2018 3:00 AM IST (Updated: 28 July 2018 10:59 PM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலைய சரக்கு பிரிவில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்களை பெற முயன்ற இடைத்தரகர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை விமான நிலைய சரக்கு பிரிவுக்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் விமானத்தில் வந்தது. அந்த பொருட்களை வாங்கிச்செல்ல வந்து இருப்பதாக கூறிய ஒரு கும்பல், அதற்கான ஆவணங்களை விமான நிலைய சரக்கு பிரிவு அதிகாரிகளிடம் வழங்கினர்.

ஆனால் அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் அவர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் அவர்கள் அளித்த ஆவணங்களை அதிகாரிகள் பரிசோதித்தனர்.

அதில் அவர்கள், வேறு ஒரு நிறுவனத்துக்கு வந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்களை, அந்த நிறுவத்தின் பெயரில் போலியான ஆவணங்களை தயாரித்து பெற வந்த இடைத்தரகர்கள் என்பது தெரிந்தது.

இதுபற்றி விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விமான நிலைய உதவி கமி‌ஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து பல்லாவரத்தைச் சேர்ந்த சதீஷ்(வயது 35), சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சிவகுமார்(32), நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜூ(40) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இடைத்தரகர்களான இவர்கள், வேறு நிறுவனத்துக்கு வந்த பொருட்களை எதற்காக போலி ஆவணங்கள் தயாரித்து பெற முயன்றனர்?. இதுதான் முதல் முறையா? அல்லது ஏற்கனவே பலமுறை இதுபோல் போலி ஆவணங்கள் கொடுத்து, பிற நிறுவனங்களுக்கு வந்த பொருட்களை பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளனரா?.

உண்மையில் அந்த பார்சலில் மின்சாதன பொருட்கள்தான் உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story