இந்திய கால்பந்து அணி முன்னாள் வீரர் பலி அடையாளம் தெரியாத வாகனம் மோதியது


இந்திய கால்பந்து அணி முன்னாள் வீரர் பலி அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
x
தினத்தந்தி 28 July 2018 10:45 PM GMT (Updated: 28 July 2018 6:17 PM GMT)

தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற இந்திய கால்பந்து அணி முன்னாள் வீரர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருடைய மகன் குலோத்துங்கன் (வயது38). இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ஆவார். சந்தோஷ் டிராபி கோப்பைக்கான போட்டியில் தமிழக அணி சார்பிலும் கலந்து கொண்டு விளையாடி உள்ளார். தற்போது மேற்கு வங்காளத்தில் உள்ள கிளப் அணியில் விளையாடி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

குலோத்துங்கன் நேற்று முன்தினம் இரவு தஞ்சை கிட்டு கால்பந்து மைதானத்தில் நடந்த ஐவர் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடிவிட்டு பின்னர் வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை திருச்சி செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.


அதிகாலை 2 மணி அளவில் தஞ்சை– வல்லம் இடையே ஆலக்குடி பைபாஸ் சாலையில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி மோட்டார்சைக்கிள் சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் இருந்த இரும்புகம்பி மீது மோதியது. இதில் கீழே விழுந்த குலோத்துங்கன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குலோத்துங்கனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து குலோத்துங்கன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.

Next Story