மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்


மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 29 July 2018 4:00 AM IST (Updated: 29 July 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

கலசபாக்கம் அருகே மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கலசபாக்கம்,

திருவண்ணாமலை அருகே கலசபாக்கம் ஆதமங்கலம் புதூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சுப்பிரமணியன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் நல்லான்பிள்ளைபெற்றான் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் தனக்கு தலைவலி என்று கூறி அந்த 5-ம் வகுப்பு மாணவியை தைலம் தேய்த்து விடுமாறு அழைத்துள்ளார். மாணவியும், தலைமை ஆசிரியருக்கு தைலம் தேய்த்து விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து மாணவிஅவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளனர்.

மேலும் தகவலறிந்த அந்த பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மாணவியிடம் தலைமை ஆசிரியர் சில்மிஷம் செய்ததாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு புகார் செய்தனர். முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் வட்டார கல்வி அலுவலர் சுப்பிரமணியன் அந்த பள்ளியில் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது அந்த பகுதி மக்கள், இந்த பள்ளியில் மாணவர்களின் கல்வி தரம் குறைந்து வருவதாகவும், தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் மாணவியிடம் சில்மிஷம் செய்ததாகவும் புகார் கூறினர். ஆனால் மாணவியின் பெற்றோர் இதுகுறித்து எந்த புகார் மனுவையும் அளிக்கவில்லை என்று கடலாடி போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து வட்டார கல்வி அலுவலர் கொடுத்த விசாரணை அறிக்கையை தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், ஆதமங்கலம் புதூர் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையில் சுப்பிரமணியன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்ததாகவும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தகவலறிந்த அவர் அதிகப்படியான மாத்திரைகள் சாப்பிட்டு மயங்கி விழுந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story