பெண் குழந்தைகளை பெற்றோர்கள் கவனமுடன் பார்த்து கொள்ள வேண்டும் - மாவட்ட முதன்மை நீதிபதி அறிவுரை


பெண் குழந்தைகளை பெற்றோர்கள் கவனமுடன் பார்த்து கொள்ள வேண்டும் - மாவட்ட முதன்மை நீதிபதி அறிவுரை
x
தினத்தந்தி 29 July 2018 4:45 AM IST (Updated: 29 July 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

பெண் குழந்தைகளை பெற்றோர்கள் கவனமுடன் பார்த்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் இணைந்து மனித கடத்தல் தடுப்பு ஒழிப்பு தின விழா திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடத்தியது. கலெக்டர் கந்தசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ராஜ்மோகன் வரவேற்றார்.

திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான மகிழேந்தி தலைமை தாங்கி பேசியதாவது:-

மனித கடத்தல் என்பது உடல் உறுப்புகளுக்காகவும், பாலியல் துன்புறுத்தலுக்காகவும், கொத்தடிமைகளாக வேலை வாங்குவதற்காகவும் நடைபெறுகிறது. அதிகளவில் இளம்குழந்தைகளே கடத்தப்படுகின்றனர். பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக பெண் குழந்தைகளை பெற்றோர்கள் கவனத்தோடு பார்த்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து பெற்றோர்கள் எடுத்து சொல்ல வேண்டும்.

பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது விலை உயர்ந்த ஆபரணங்களை அணிவித்து செல்ல அனுமதிக்கக் கூடாது. குழந்தைகளை பள்ளி வாகனங்களில் அனுப்பிவிட்டு நம் வேலை முடிந்து விட்டது என்று இருக்கக் கூடாது. அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு சரியாக செல்கிறார்களா என்று கவனிக்க வேண்டும்.

குழந்தைகளிடம் முகம் தெரியாதவர்கள் தவறான விஷயம் கூறினால் அதனை குழந்தைகள் உடனே தங்களுடைய பெற்றோர்களிடமோ அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையம், 1098 என்ற எண்ணிற்கோ, நீதிமன்றத்திலோ, நீதிமன்றத்தில் இயங்கி வரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அல்லது வட்ட சட்டப்பணிகள் குழு அலுவலகத்திலோ புகார் தெரிவிக்கலாம்.

பெண் குழந்தைகளை கூடுமான வரையில் நன்றாக படிக்க வைக்க வேண்டும். 18 வயதுக்கு முன்பு பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து கொடுப்பது பெற்றோர்களுக்கு தண்டனைக்கு உரிய செயலாகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் இளம் வயதிலேயே தங்களுடைய பிள்ளைகளை வேறு மாவட்டங்களுக்கு செங்கல் சூளை போன்றவற்றில் கொத்தடிமைகளாக அனுப்புவதும் அதிகரித்துள்ளது. அதனை தடுக்க வேண்டும். அவ்வாறு யாரேனும் இளம் சிறார்களை வேலைக்கு அமர்த்தியிருந்தால் உடனடியாக போலீசாரிடமும், நீதிமன்றத்திலும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா, கூடுதல் மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா, மகளிர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி நடராஜன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி லட்சுமி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சாதிக்பாஷா மற்றும் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வழக்கறிஞர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் முதன்மை சார்பு நீதிபதி ஸ்ரீராம் நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக அலுவலர் சையத்ரஷீத் செய்திருந்தார்.

Next Story