குமாரமங்கலம் காட்டுவாரி மராமத்து பணியை விவசாயிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு


குமாரமங்கலம் காட்டுவாரி மராமத்து பணியை விவசாயிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 July 2018 4:15 AM IST (Updated: 29 July 2018 2:26 AM IST)
t-max-icont-min-icon

குமாரமங்கலம் காட்டுவாரியை மராமத்து பணியை விவசாயிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குளித்தலை,

தமிழ்நாடு பொதுப்பணித்துறை (நீர்வல ஆதாரத்துறை) மூலம் குடி மராமத்து திட்ட பணிகள் மூலம் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டத்திற்கு உட்பட்ட புதுபட்டி முதல் குளித்தலை, மருதூர், குமாரமங்கலம் வழியாக திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை வரை செல்லும் காட்டுவாரியை தூர்வார ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று குமாரமங்கலம் முதல் பெட்டவாய்த்தலை வரை செல்லும் காட்டுவாரியை மராமத்து செய்யும் பணிகள் மேற்கொண்டனர். அப்போது அங்குவந்த விவசாயிகள் சிலர் பணிகளை தடுத்து நிறுத்தி, மராமத்து பணிகளை பெயரளவில் நடப்பதாகவும், முறையாக பணிகள் மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

இந்த காட்டுவாரியின் கடைமடை பகுதியான பெட்டவாய்த்தலை பகுதியில் இருந்து காட்டுவாரியை மராமத்து செய்யவேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இருப்பினும் எங்களின் கோரிக்கையை ஏற்காமல் குமாரமங்கலத்தில் இருந்து காட்டுவாரியை மராமத்து செய்து வருகின்றனர். இந்த காட்டுவாரியில் முறைப்படி மராமத்து பணிகள் மேற்கொள்ள குறைந்தது ஒருவாரமாகும். ஆனால் தற்போது இக்காட்டுவாரியில் உடனடியாக தண்ணீர் திறக்கவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்த நிலையில் காட்டுவாரியின் கரைகளை அகலப்படுத்தாமலும், இப்பகுதி விவசாயிகள் சிலர் மூலம் காட்டுவாரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியை கையகப்படுத்தாமலும் பெயரளவில் அவசர அவசரமாக பொக்லைன் எந்திரங்களை கொண்டு காட்டுவாரியின் கரையில் இருக்கும் மண்ணை காட்டுவாரிக்குள் கொட்டி சமப்படுத்தி வருகின்றனர். இதனால் எந்தவித பயனும் இல்லை. எனவே முறைப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரவேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு மராமத்து பணியை மேற்பார்வை செய்யும் அலுவலர் ஆக்கிரமிப்புகளை அகற்றி தருவதாக கூறியதை அடுத்து விவசாயிகள் சமாதானம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story