தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு நீலகிரியில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலை நிறுத்தம்


தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு நீலகிரியில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 29 July 2018 4:45 AM IST (Updated: 29 July 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரியில் தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன. 200–க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தேசிய மருத்துவ ஆணையம் அமைத்தால் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு 15 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும்.

இதனால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதுதவிர மாற்று மருத்துவ முறை மருத்துவர்கள் இணைப்பு பயிற்சி என்ற பெயரில் அலோபதி மருத்துவம் பார்க்க அனுமதிப்பது மருத்துவ சமுதாயத்துக்கு எதிரானது என இந்திய மருத்துவ சங்கம் அதிருப்தி அடைந்துள்ளது.

இதனால் மத்திய அரசுடன் பலகட்டங்களாக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்படும் என இந்திய மருத்துவ சங்க முன்னாள் மாநில தலைவர் டாக்டர் ரவிசங்கர் சென்னையில் அறிவித்தார். இதையொட்டி நேற்று காலை 6 முதல் மாலை 6 மணி வரை தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன. மேலும் தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர், கோத்தகிரி பகுதிகளில் உள்ள பெரும்பாலான தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன. ஆஸ்பத்திரி கதவுகளில் மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டு இருந்தது. 200–க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளுக்கு மட்டும் சில டாக்டர்கள் பணிக்கு வந்து இருந்தனர். ஊட்டி நகரில் தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டதால் அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து இருந்தது.


Next Story