குடிபோதையில் போலீசாரிடம் தகராறு செய்த வாலிபர் கைது, நான் யார் தெரியுமா? என்று வீராப்பு பேசியவர் பின்னர் மன்னிப்பு கேட்டார்
போக்குவரத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரிடம் குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். சப்–இன்ஸ்பெக்டரை மிரட்டுவது, விசாரணைக்கு பின்னர் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கோவை,
கோவை ஆம்னி பஸ் நிலையம் அருகே போக்குவரத்து பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அந்த வாலிபர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, நான் யார் தெரியுமா?, நீதிபதியின் உறவினர் என்று கூறியதோடு, சப்–இன்ஸ்பெக்டரிடம் ‘உங்கள் பெயர் என்ன? வேலையை விட்டே தூக்கிவிடுவேன்’ என்று கூறியபடி தகராறு செய்தார்.
அதோடு முகநூலிலும் இந்த காட்சிகளை பதிவு செய்து விடுவேன் என்று கூறி மிரட்ட தொடங்கினார். இதனால் அங்கு கூட்டம் கூடியது. சிலர் நடந்த சம்பவத்தை செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர்.
இதனையடுத்து தகராறு செய்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் கல்வீரம்பாளையத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுதர்சன் (வயது 28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்தனர்.
இதற்கிடையில் வாலிபர், போலீசாருடன் தகராறு செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. தொடர்ந்து போலீசார் கைது செய்த பிறகு அந்த ஆவேச வாலிபர் அமைதியாகி மிகவும் சாந்தமாக பேசும் காட்சி வலைதளத்தில் வெளியானது. அவரா இப்படி? என்று கேட்கும் விதத்தில் அவரது பேச்சு இருந்தது.
அவர், ‘போக்குவரத்து போலீசார் இரவிலும், பகலிலும், வெயிலிலும், மழையிலும் நின்று போக்குவரத்தை கவனிக்கிறார்கள். அவர்களது பணி பாராட்டுக்குரியது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது தவறு. அதுபோன்று யாரும் செய்யக்கூடாது. நான் சப்–இன்ஸ்பெக்டரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறுகிறார்.
போலீஸ் நடவடிக்கைக்கு முன்பு, நடவடிக்கைக்கு பிறகு என்று பதிவிட்டு இந்த காட்சிகள் ‘வாட்ஸ்–அப்’பில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.