விருதுநகர் அருகே விபத்தில் பலியானவர் உடலை நடுரோட்டில் வைத்து மறியல்


விருதுநகர் அருகே விபத்தில் பலியானவர் உடலை நடுரோட்டில் வைத்து மறியல்
x
தினத்தந்தி 29 July 2018 5:00 AM IST (Updated: 29 July 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் பலியானவர் உடலை நடுரோட்டில் வைத்து கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 28). இவரும், இவரது சகோதரர் நாகேஸ்வரன் என்பவரும் விருதுநகர்–சாத்தூர் ரோட்டில் சூலக்கரைமேடு அருகே சாலையை கடந்து சென்றபோது மதுரையில் இருந்து நாங்குநேரி சென்ற கார் மோதியதில் பால்பாண்டி படுகாயம் அடைந்தார்.

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது பற்றி நாகேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் கார் டிரைவர் மதுரையை சேர்ந்த செல்வம் என்பவரை கைது செய்து வழக்குபதிவு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று பால்பாண்டியின் உடல் பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை எடுத்து சென்றவர்கள், அதனை நடுரோட்டில் வைத்து மறியலில் இறங்கினார்கள்.

சூலக்கரை பஸ் நிறுத்தம் அருகே நான்கு வழிச்சாலையில் தடுப்புவேலி வைக்க கோரியும், உயர்கோபுர மின் விளக்கு அமைக்க கோரியும் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தால் பரபரப்பு உருவானது. நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.


Next Story