ஐகோர்ட்டு வளாகத்தில் துப்புரவு பணி மேற்கொண்ட நீதிபதிகள் பிளாஸ்டிக்கு மாற்றாக துணிப்பைகளை வழங்கினர்


ஐகோர்ட்டு வளாகத்தில் துப்புரவு பணி மேற்கொண்ட நீதிபதிகள் பிளாஸ்டிக்கு மாற்றாக துணிப்பைகளை வழங்கினர்
x
தினத்தந்தி 29 July 2018 3:45 AM IST (Updated: 29 July 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு வளாகத்தில் நீதிபதிகள் துப்புரவு பணியினை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் பிளாஸ்டிக் பைகைகளுக்கு பதிலாக துணிப்பைகளை வழங்கினர்.

மதுரை,

மதுரை ஐகோர்ட்டு வளாகத்தை சுத்தமாக பராமரிக்கும் வகையிலும், பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்றும் வகையிலும் நேற்று சிறப்பு தூய்மைப்பணி நடந்தது. கலெக்டர் வீரராகவராவ், மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீதிபதிகள் செல்வம், சுந்தர், பஷீர் அகமது, நிஷா பானு, கிருஷ்ணவள்ளி ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்களும் துப்புரவு பணியை மேற்கொண்டனர்.

இதில் மாநகராட்சியின் 75 துப்புரவு பணியாளர்கள், 6–வது பட்டாலியன் சார்ந்த 40 காவலர்கள், 40 ஊராட்சி பணியாளர்கள், 45 மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை வீரர்களும் கலந்து கொண்டு துப்புரவு பணி மேற்கொண்டனர். அப்போது மக்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கப்பட்டது.

நீதிபதி செல்வம் பேசும் போது கூறியதாவது:–

ஐகோர்ட்டு மதுரை கிளையில் பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்ட வளாகமாக ஏற்கனவே அறிவித்து இருந்தோம். அதனை தொடர்ந்து கடைபிடித்தும் வருகிறோம். பொதுமக்கள் அனைவரும் சுற்றச்சுழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பைகளை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பையை உபயோகப்படுத்த வேண்டும். ஏனென்றால் பிளாஸ்டிக் பையினை பூமியில் போட்டால் பல ஆண்டு காலத்திற்கு பிறகும் அது பிளாஸ்டிக் பொருளாகவே இருக்கும். பொதுமக்கள் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீங்கினை கருத்தில் கொண்டு முற்றிலுமாக தவிர்த்து மாற்று பொருளை உபயோகப்படுத்த வேண்டும். இயற்கை வளங்களை நாம் மதித்தால் தான் இயற்கை நம்மை மதிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story