சிவகங்கையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் திடீர் நடவடிக்கையால் வர்த்தகர்கள் எதிர்ப்பு
சிவகங்கை நகரில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் திடீர் நடவடிக்கை எடுத்ததாக கூறி வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை,
சிவகங்கை நகரின் முக்கிய வர்த்தக வீதியான நேருபஜார் பகுதியில் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதனால் ஆக்கிரமிப்புகளை வர்த்தகர்கள் முன்வந்து உடனடியாக அகற்ற வேண்டும், இல்லையென்றால் அதிகாரிகள் அகற்றுவார்கள் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை நகராட்சி ஆணையாளர் அயூப்கான், தாசில்தார் ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அழகர், ரவிச்சந்திரன், மோகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சென்று நேருபஜாரில் கடைகளின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். அப்போது அதிகாரிகளின் இந்த செயலுக்கு அந்த பகுதி வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடைகளுக்கு வரும் பொதுமக்கள் மழை மற்றும் வெயிலில் இருந்து தங்களை பாதுகாக்க கடையில் இருந்து 3 அடிக்கு தரையில் கால் ஊன்றாமல் மேற்கூரை அமைக்க அனுமதி பெற்று தான் அமைத்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். அத்துடன் உரிய அவகாசம் தராமல் திடீரென்று அதிகாரிகள் அகற்றுவது நியாயம் இல்லை என்றனர்.
இருப்பினும் அந்த வீதியில் இருந்த ஆக்கிரமிப்பு முழுவதை அதிகாரிகள் அகற்றினர்.
இதுகுறித்து நகர் வர்த்தகர் சங்க தலைவர் அறிவுத்திலகம் கூறும்போது, சிவகங்கையில் முக்கிய வர்த்தக பகுதியாக நேருபஜார் உள்ளது. இங்கு தான் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள். அவ்வாறு வரும் பொதுமக்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் தங்களை பாதுகாக்க வசதியாக அனுமதிபெற்று மேற்கூரை அமைத்துள்ளோம். இந்தநிலையில் அதனை ஆக்கிரமிப்பு கூறி எந்தவித அவகாசம் தராமல் திடீரென்று அகற்றியதால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) வர்த்தகர் மற்றும் அனைத்துக்கட்சியினர் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்ய உள்ளோம் என்றார்.
அதிகாரிகள் கூறுகையில், சிவகங்கை நகரில் நேரு பஜாரை தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது என்றனர்.