காலிங்கராயன் வாய்க்கால் பாசன வயல்களில் கழிவுநீர் கலப்பதால் நெல் நடவு பணிகள் பாதிப்பு
காலிங்கராயன் வாய்க்கால் பாசன வயல்களில் கழிவுநீர் கலப்பதால் நெல் நடவு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஈரோடு,
காலிங்கராயன் வாய்க்கால் மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த வாய்க்கால்களில் கடைமடை வரை தண்ணீர் சீராக செல்ல கான்கிரீட் தளமும், குடியிருப்பு பகுதிகளின் கழிவுநீர், வாய்க்காலில் கலப்பதை தடுக்க பேபி வாய்க்காலும் அமைக்கப்பட்டது. அதன்படி 3 கட்டங்களாக இந்த பணிகள் நடந்து வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு வைராபாளையத்தில் இருந்து காரை வாய்க்கால் வரை பேபி வாய்க்காலும், கான்கிரீட் தளமும் அமைக்கப்பட்டது.
இதில் பேபி வாய்க்காலில் வரும் கழிவுநீர் கருங்கல்பாளையம் கே.எஸ்.நகர் பி.எஸ்.அக்ரஹாரம் பகுதியில் இருந்து காவிரி ஆற்றில் கலக்கும் வகையில் காலிங்கராயன் வாய்க்காலின் குறுக்கே அடிமட்ட பாலமும் கட்டப்பட்டு உள்ளது. அதன் வழியாக வெளியேறும் கழிவுநீரை, காவிரி ஆறு வரை கால்வாய் அமைத்து கொண்டு செல்ல வேண்டும். ஆனால் காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து காவிரி ஆறு வரை சாக்கடை கால்வாய் அமைக்கப்பட வில்லை. இதனால் வயல்களில் கழிவுநீர் கலந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 19–ந் தேதி காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த வாய்க்கால் பாசன பகுதிகளில் நெல் நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் கே.எஸ்.நகர் பகுதியில் விவசாயிகள் நெல் நடவு பணிகளை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:–
பி.எஸ்.அக்ரஹாரம் பகுதியில் காலிங்கராயன் கிளை வாய்க்கால் மூலமாக சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டதுடன், வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பேபி வாய்க்காலும் அமைக்கப்பட்டது.
பேபி வாய்க்காலில் வரும் கழிவுநீரை காலிங்கராயன் வாய்க்காலின் அடிப்பகுதியில் பாலம் அமைத்து காவிரி ஆற்றில் சென்று கலக்கும் வகையில் புதிய கால்வாய் கட்டப்படும் என்று கட்டுமான பணிகள் நடக்கும்போதே அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் காலிங்கராயன் வாய்க்காலின் அடிப்பகுதியில் பாலம் மட்டுமே அமைத்தனர். அதன்பின்னர் காவிரி ஆறு வரை கால்வாய் கட்டப்படவில்லை. இதனால் கழிவுநீர் முழுவதும் வயல்களில் கலக்கிறது.
வயல் முழுவதும் கழிவுநீர் பாய்ந்து செல்வதால் நாங்கள் நெல் நடவு பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கிறோம். இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம். அதிகாரிகள் 2 முறை நேரில் வந்து பார்வையிட்டு, வாய்க்கால் அமைத்த ஒப்பந்ததாரர்கள் சரிசெய்து கொடுப்பார்கள் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை யாரும் சரிசெய்து கொடுக்கவில்லை. விதைநெல் மூலமாக நாற்றுக்களை வளர்க்கக்கூட முடியாமல் விவசாய பணிகள் முடங்கிப்போய் உள்ளது. எனவே வயல்களில் கழிவுநீர் கலப்பதை தடுத்து புதிய கால்வாய் அமைக்க பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காலிங்கராயன் வாய்க்காலில் கட்டப்பட்ட புதிய மதகுகளும் புதர்மண்டி கிடக்கிறது. இதையும் சீரமைத்து கொடுக்க வேண்டும்.