சென்னிமலை அருகே பயங்கரம்: பெண் படுகொலை, வாலிபர் கைது


சென்னிமலை அருகே பயங்கரம்: பெண் படுகொலை, வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 July 2018 5:30 AM IST (Updated: 29 July 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே சேலையால் கழுத்தை இறுக்கி பெண் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னிமலை,

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள முகாசிபிடாரியூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சிந்து (வயது 27). இவர் சென்னிமலையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் அலுவலக பணியாளராக வேலை செய்து வந்தார்.

சென்னிமலை 1010 நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் தனசேகரன் (24). தொழிலாளி. ஆறுமுகமும், தனசேகரனும் உறவினர் ஆவார்கள். இதனால் தனசேகரன் அடிக்கடி ஆறுமுகம் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் ஆறுமுகம் தனக்கு அவசரமாக ரூ.5 ஆயிரம் தேவைப்படுகிறது. எனவே யாரிடமாவது கடன் வாங்கி தர முடியுமா? என தனசேகரனிடம் கேட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து சென்னிமலை அருகே உள்ள தோப்புபாளையம் பகுதியில் தனக்கு தெரிந்த நபர் ஒருவர் உள்ளார். அவரிடம் கடன் கேட்டு பார்க்கிறேன் என்று தனசேகரன் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைக்கு ஆறுமுகமும், ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சிந்துவும் வேலைக்கு சென்றுவிட்டனர். வேலைக்கு சென்ற பின்னர் ஆறுமுகத்தை செல்போனில் தொடர்பு கொண்ட தனசேகரன், தோப்புபாளைத்தில் உள்ள தனது நண்பர் ஒருவர் ரூ.5 ஆயிரம் தருவதாக கூறி உள்ளார். எனவே உங்களுடைய மனைவி சிந்துவை என்னுடன் அனுப்பி வையுங்கள். பணத்தை வாங்கி கொடுத்துவிடுகிறேன் என அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சென்னிமலையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சென்று சிந்துவை அழைத்து செல்லுங்கள் என தனசேகரனிடம், ஆறுமுகம் கூறினார். உடனே சென்னிமலையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சென்ற தனசேகரன், அங்கிருந்த சிந்துவை மோட்டார்சைக்கிளில் அழைத்துக்கொண்டு சென்றார்.

பின்னர் மதியம் சிப்காட்டுக்கு தனசேகரன் சென்று அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஆறுமுகத்தை நேரில் சந்தித்து ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அவரிடம், ‘பணத்தை சிந்துவிடம் கொடுக்கவில்லை. அவரை அங்கிருந்து சென்னிமலைக்கு பஸ்சில் ஏற்றிவிட்டேன்,’ என்றார். பணத்தை பெற்றுக்கொண்ட ஆறுமுகம், வேலை முடிந்ததும் மாலையில் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டுக்கு சிந்து வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகத்துக்கு போன் செய்தார். இடையில் தனசேகரனுடன் சென்றவர் அலுவலகத்துக்கு வரவில்லை என கூறினர். இதையடுத்து ஆறுமுகம் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தார். எனினும் சிந்துவை கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் தனசேகரன் நடவடிக்கையில் ஆறுமுகத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னிமலை போலீசில் ஆறுமுகம் புகார் செய்தார். அந்த புகாரில், ‘தன்னுடைய மனைவி சிந்துவை தனசேகரன் கடத்தி சென்றுவிட்டார். மேலும் அவர் 5½ பவுன் தங்க சங்கிலி அணிந்திருந்தார். எனவே அவரை மீட்டு தர வேண்டும்,’ என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகரனை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சென்னிமலை–ஈங்கூர் ரோட்டில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் சந்தேகப்படும் வகையில் வந்தவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், ‘அவர்தான் தனசேகரன் என்பதும், சிந்துவை மோட்டார்சைக்கிளில் கடத்தி சென்று சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனசேகரனை போலீசார் கைது செய்தனர்.


Next Story