இந்தியா வல்லரசாக இளம் என்ஜினீயர்களின் பங்களிப்பு அதிகம் தேவை


இந்தியா வல்லரசாக இளம் என்ஜினீயர்களின் பங்களிப்பு அதிகம் தேவை
x
தினத்தந்தி 29 July 2018 4:15 AM IST (Updated: 29 July 2018 2:34 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா வல்லரசாக இளம் என்ஜினீயர்களின் பங்களிப்பு அதிகம் தேவைப்படுகிறது என என்.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு தலைவர் அனில் டி.சகஸ்ரபுதே பேசினார்.

திருச்சி,

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) 14-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு தலைவர் அனில் டி. சகஸ்ரபுதே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தேசிய, பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் போது அங்குள்ள கருத்துகள், அறிவுசார்ந்த திறன்கள் பரிமாறப்படும் போது மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படும். மாணவர்கள் சாதிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளில் அதிக அளவில் ஈடுபட வேண்டும்.

என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு நிறைய வாய்ப்பு உள்ளது. டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா திட்டம் உள்பட பல்வேறு புதிய திட்டங் களில் என்ஜினீயரிங் துறைகளின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. இந்தியா வல்லரசாக இளம் என்ஜினீயர்களின் பங்களிப்பு அதிகம் தேவைப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் 1,689 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை அவர் வழங்கினார். மேலும் 27 மாணவ-மாணவிகளுக்கு தங்க பதக்கங்களையும் அவர் வழங்கினார். அனைத்து துறைகளையும் சேர்த்து முதல் இடத்தை பி.டெக் மாணவி ஆர்த்தி பிடித்தார். அவரது துறையிலும் தனியாக அவர் முதல் இடத்தை பிடித்திருந்தார். இதனால் மாணவி ஆர்த்திக்கு 2 தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில் என்.ஐ.டி. இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் பேசுகையில், “திருச்சி என்.ஐ.டி.யில் ரூ.190 கோடியில் சிறந்த உற்பத்தி திறன் மையம் அமைக்கப்பட உள்ளது. இதில் நவீன ரோபோக்கள், ஆய்வுக்கூடங்கள், நூலகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது. இந்த மையம் என்ஜினீயரிங் துறைகளில் ஆராய்ச்சிக்கு கூடுதலாக பயன்படும்” என்றார். விழாவில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், அவர்களது பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து முன்னாள் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நடந்தது. இதில் திருச்சி பாய்லர் ஆலை செயல் இயக்குனர் ராஜமனோகருக்கு சிறந்த மாணவர் விருதை என்.ஐ.டி. இயக்குனர் வழங்கினார்.

Next Story