விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஆமை குஞ்சுகளில் வைரஸ் கிருமிகள்? இளையான்குடியை சேர்ந்தவருக்கு வலைவீச்சு


விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஆமை குஞ்சுகளில் வைரஸ் கிருமிகள்? இளையான்குடியை சேர்ந்தவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 29 July 2018 4:45 AM IST (Updated: 29 July 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஆமை குஞ்சுகளில் வைரஸ் கிருமிகள் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இளையான்குடியை சேர்ந்தவரை சுங்கத்துறை அதிகாரிகள் வலைவீசி தேடிவருகின்றனர்.

செம்பட்டு,

இலங்கையிலிருந்து கடந்த 25-ந்தேதி திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் ஒரு பெட்டியில் கடத்தி வந்த ஆமைகுஞ்சுகளை விட்டுச்சென்றார். அதனை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அதில் 22 கிலோ எடை அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் இருந்தன.

அதனை கொண்டு வந்த பயணி யார்? என்பதை அடையாளம் காணும் முயற்சியில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட ஆமை குஞ்சுகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “அந்த ஆமை குஞ்சுகள் இந்திய நாட்டில் வாழும் உயிரினம் இல்லை. நீரில் வசிக்க கூடிய இந்த வெளிநாட்டு ஆமைகளை நமது நாட்டில் விட முடியாது. இந்த ஆமை குஞ்சுகளை மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட பின்பு தான் அதனை பெறமுடியும்.

ஆமை குஞ்சுகளில் நோய் பரப்பக்கூடிய வைரஸ் கிருமிகள் எதுவும் பாய்ச்சப்பட்டுள்ளதா? என சோதனையிட வேண்டும். இதற்கான வசதி சென்னையில் உள்ளது. அந்த சோதனைக்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும்”என்றனர்.

இதற்கிடையில் ஆமை குஞ்சுகளை நேற்று திருச்சி விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர். சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், “ஸ்ரீலங்கன் விமானத்தில் ஆமை குஞ்சுகளை கடத்தி வந்தவரை அடையாளம் காணும் வகையில் இலங்கை விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை சோதனையிடுமாறு அங்குள்ள அதிகாரிகளிடம் கூறினோம். இதில் ஆமைகளை கடத்தி வந்தவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி என தெரியவந்தது. அவர் தான் ஒரு சூட்கேசில் அட்டை பெட்டிகளை வைத்து ஆமை குஞ்சுகளை கடத்தி வந்துள்ளார். திருச்சி வந்ததும் சோதனைக்கு பயந்து விமானத்திலேயே விட்டுச்சென்றுள்ளார். அவரை பிடித்து விசாரணை நடத்த உள்ளோம். அவர் எதற்காக ஆமை குஞ்சுகளை கடத்தி கொண்டு வந்தார் என்பது விசாரணைக்கு பின்பு தான் தெரியவரும். அந்த ஆமைகளில் நோய்களை பரப்பும் வைரஸ் கிருமிகள் பாய்ச்சப்பட்டு உள்ளதா? என்பது குறித்து அறிய மருத்துவ சோதனைக்கு அனுப்பப்படும்” என்றார்.

ஆமை குஞ்சுகளை அவரிடமே கொடுத்து அதனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. இதனால் முகமது அன்சாரியை வலைவீசி தேடி வருவதாக சுங்கத்துறையினர் தெரிவித்தனர். 

Next Story