காவிரி ஆற்றில் வாலிபர் அடித்து செல்லப்பட்டார் நண்பரை மீனவர்கள் மீட்டனர்


காவிரி ஆற்றில் வாலிபர் அடித்து செல்லப்பட்டார் நண்பரை மீனவர்கள் மீட்டனர்
x
தினத்தந்தி 29 July 2018 4:15 AM IST (Updated: 29 July 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றில் வாலிபர் அடித்து செல்லப்பட்டார். அவரது நண்பரை மீனவர்கள் மீட்டனர்.

பள்ளிபாளையம்,

5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 120.30 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 68 ஆயிரத்து 660 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 68 ஆயிரத்து 498 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

காவிரி கரையோர பகுதிகளில் பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அது போல் ஆற்றில் செல்பி எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் அதை ஏராளமான பொதுமக்கள் ஆங்காங்கே காவிரி கரையோரத்தில் திரண்டு நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள ஈகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் எபிநேசர் சாமுவேல்(வயது 21). பி.எஸ்சி., படித்து முடித்து விட்டார். திருச்செங்கோடு சீத்தாராமபாளையத்தை சேர்ந்தவர் ராஜகணபதி(21). என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள்.

இந்த நிலையில் நண்பர்களான இருவரும் நேற்று மதியம் பாப்பம்பாளையம் காவிரி ஆற்றில் குளிக்க வந்தனர். ஆற்றில் குளித்து கொண்டு இருக்கும் போது இருவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதை பார்த்த மீனவர்கள் அவர்களை பரிசலில் சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜகணபதியை மட்டும் மீட்டனர். எபிநேசர் சாமுவேல் காவிரி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவர் ஆற்றில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் பள்ளிபாளையம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட எபிநேசர் சாமுவேலை தேடி வருகின்றனர். 

Next Story