தண்ணீர் சீராக விழுவதால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி


தண்ணீர் சீராக விழுவதால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
x
தினத்தந்தி 29 July 2018 4:30 AM IST (Updated: 29 July 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் அருகே சுருளி அருவியில் தண்ணீர் சீராக விழுவதால் 3 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சுற்றுலாதலமாகவும், புண்ணிய தலமாகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது சுருளிஅருவி. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அடர்ந்த வனப்பகுதி வழியாக பயணித்து சுருளி அருவியாக கொட்டுகிறது

இங்கு குளித்தால் நோய் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் சுருளி அருவிக்கு தினந்தோறும் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள 7 ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதன்காரணமாக ஏரிகள் நிரம்பி வருகிறது. இதேபோல் சுருளி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு நலன்கருதி கடந்த 2 நாட்களாக சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது மழை அளவு குறைந்து நேற்று காலை அருவியில் தண்ணீர் சீராக விழுந்தது. இதையடுத்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவியில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

Next Story