தடையின்றி குடிநீர் வழங்க கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியல்


தடையின்றி குடிநீர் வழங்க கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 29 July 2018 3:57 AM IST (Updated: 29 July 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அருகே தடையின்றி குடிநீர் வழங்க கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேல்மலையனூர்,

மேல்மலையனூர் அருகே உள்ள இரும்புலி கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து மின்மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கிராம மக்கள் குடிநீருக்காக பெரிதும் அவதியடைந்து வந்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் குடிநீர் வினியோகம் செய்ய கோரி நேற்று காலை 9.30 மணி அளவில் இரும்புலி– கெங்கபுரம் சாலைக்கு காலி குடங்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த வளத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரபாலன், சப்–இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார், வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள், எங்கள் பகுதிக்கு கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் வெகு தொலைவில் உள்ள விளை நிலங்களுக்கும், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அதனால் எங்கள் பகுதியில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

அதற்கு அதிகாரிகள், குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் 10 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story