விருத்தாசலம் அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
விருத்தாசலம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே மணக்கொல்லை காலனியில் 500–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக அப்பகுதியில் ஆழ்துளை மோட்டாருடன் கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இருந்து தெருக்குழாய்கள் மூலம் குடிநீர் வனியோகம் செய்யப்பட்டு வந்தது.
தெருக்களில் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததால், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், புதிய குழாய் பதித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையில் சமீபத்தில் பழைய குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டது. இருப்பினும் பல இடங்களில் குழாய் சேதமடைந்துள்ளதால் குடிநீர் செல்லவில்லை.
இதனால் காலனி மக்கள், அருகில் உள்ள விவசாய விளைநிலங்களுக்கும், ஊர் பகுதிகளுக்கும் சென்று குடிநீர் எடுத்து வருகிறார். இந்த நிலையில் கிராம மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் மணக்கொல்லை பஸ் நிறுத்தத்திற்கு திரண்டு வந்தனர். அங்கு குடிநீர் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷமிட்டனர்.