சந்திர கிரகணத்தன்று நள்ளிரவில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி


சந்திர கிரகணத்தன்று நள்ளிரவில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி
x
தினத்தந்தி 29 July 2018 4:15 AM IST (Updated: 29 July 2018 4:15 AM IST)
t-max-icont-min-icon

சந்திர கிரகணத்தன்று நள்ளிரவில் இளம் ஜோடி திருமணம் செய்துகொண்டனர். சித்ரதுர்காவில் உள்ள முருகா மடத்தில் இந்த திருமணம் நடந்தது.

சிக்கமகளூரு,

சந்திர கிரகணம் தினத்தன்று பொதுவாக எந்த சுபகாரியங்களும் செய்ய மாட்டார்கள். அந்த தினத்தில் ஏதாவது சுபகாரியம் நடந்தால் கெட்டது நடக்கும் என்றும், சந்திர கிரகணத்தை பார்த்தால் கெட்டது நடக்கும் என்றும் மக்களிடையே மூடநம்பிக்கை இருந்து வருகிறது. இதனால் முன்காலத்தில் இருந்தே சந்திர கிரகணத்தன்று எந்த சுபகாரியங்களும் நடக்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் மக்களிடையே பரவி உள்ள இந்த மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் ஒரு இளம் ஜோடி, சந்திர கிரகணத்தன்று நள்ளிரவில் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சித்ரதுர்காவில் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா பூவினஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மரடி ரங்கப்பா (வயது 27). இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த வசந்தகுமாரி (25) என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த ஜோடி, தங்கள் திருமணம் மூலம் மக்களிடையே உள்ள மூடநம்பிக்கையை ஒழிக்க முடிவு செய்தனர்.

அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு சந்திர கிரகணத்தன்று இந்த இளம் ஜோடியினர் சித்ரதுர்காவில் உள்ள முருகா மடத்தில் வைத்து, மடாதிபதி சிவமூர்த்தி முருகன் சுவாமி முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். அவர்களை மடாதிபதி சிவமூர்த்தி முருகன் சுவாமி வாழ்த்தி ஆசி வழங்கினார்.

இதையடுத்து மடாதிபதி சிவமூர்த்தி முருகன் சுவாமி கூறுகையில், ‘அந்த காலத்தில் இருந்தே சந்திர கிரகணம் நடந்து வருகிறது. ஆனால் சந்திர கிரகணம் கெட்டது என்று கூறுகிறார்கள். சந்திர கிரகணம் கெட்டது கிடையாது. இதன் மூலம் நல்லது தான் நடக்கும். இந்த மூடநம்பிக்கையால் சந்திர கிரகணத்தன்று எந்த சுபகாரியங்களும் நடக்காது. மக்களிடையே உள்ள இந்த மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் இந்த திருமணம் நடந்துள்ளது’ என்றார்.


Next Story