சினிமா படப்படிப்பில் சாப்பாடு கேட்டு தகராறு; தொழிலாளிக்கு கத்திக்குத்து, 2 பேர் கைது
புதுவை வில்லியனூரில் நடைபெற்ற ‘திமிரு பிடித்தவன்’ சினிமா படப்பிடிப்பின் உணவு இடைவேளையின்போது தொழிலாளி கத்தியால் குத்தப்பட்டார். இது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் திருக்காமீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அடிக்கடி சினிமா படப்பிடிப்புகள் (ஷூட்டிங்) நடைபெறும். நேற்று திருக்காமீசுவரர் கோவிலில் நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகை கேத்தரின் தெரசா நடிக்கும் ‘திமிரு பிடித்தவன்’ என்கிற சினிமா படிப்பு நடைபெற்றது. அதனைக் காண அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு இருந்தனர்.
இந்த நிலையில் படப்பிடிப்பில் பணியாற்றிய சினிமா கம்பெனி தொழிலாளர்களுக்கு தேவையான உணவுகளை புதுவை வானரப்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார் (வயது 41) என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். கோவில் வளாகத்திற்கு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொழிலாளர்களுக்கு உணவுகள் பரிமாறப்பட்டன.
அப்போது சினிமா படப்பிடிப்பை பார்ப்பதற்கு வந்திருந்த ஆரியப்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபர் ராஜ்குமார் (26), அவருடைய நண்பர் பெருமாள் (35) ஆகியோர் திருமண மண்டபத்துக்கு வந்தனர். அங்கு சாப்பாடு பரிமாறியவர்களிடம் அவர்கள் இருவரும் சென்று தங்களுக்கும் சாப்பாடு வேண்டுமென கேட்டதாக தெரிகிறது.
அப்போது தொழிலாளர்களுக்கு உணவு வழங்கிக்கொண்டிருந்த ராஜ்குமார் சினிமா கம்பெனி தொழிலாளிகளுக்கு மட்டுமே உணவுகள் வழங்கப்படும் என்று கூறி அவர்களுக்கு உணவு தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் நண்பர்கள் இருவரும் ஆத்திரமடைந்தனர். அங்கு வாழை இலைகளை நறுக்க வைத்திருந்த பேனா கத்தியை எடுத்து உணவு தர மறுத்த ராஜ்குமாரின் தோள்பட்டை பகுதியில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் ராஜ்குமார் காயம் அடைந்து அலறினார்.
அங்கிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காரணமாக படப்பிடிப்பு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரின்பேரில் மேற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் உத்தரவின்பேரில் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்–இன்ஸ்பெக்டர் வேலய்யன் ஆகியோர் விசாரணை நடத்தி வாலிபர்கள் ராஜ்குமார், பெருமாள் ஆகியோரை கைது செய்தனர்.