வடகர்நாடகம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து 2-ந்தேதி விதானசவுதா முற்றுகை


வடகர்நாடகம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து 2-ந்தேதி விதானசவுதா முற்றுகை
x
தினத்தந்தி 29 July 2018 4:35 AM IST (Updated: 29 July 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

வடகர்நாடகம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து வருகிற 2-ந் தேதி விதானசவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலத்தில் இதுவரை ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகள் வடகர்நாடகத்தில் உள்ள மாவட்டங்களை புறக்கணித்து வந்துள்ளன. இதனால் தான் அந்த மாவட்டங்களை சேர்ந்த போராட்ட குழுவினர் தனிமாநிலம் கோரி அடுத்த மாதம்(ஆகஸ்டு) 2-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். கர்நாடகம் எப்போதும் அகண்ட கர்நாடகமாக இருக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் தனிமாநிலம் வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் பட்ஜெட்டில் வடகர்நாடக பகுதிக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வடகர்நாடக பகுதிக்கு ஏற்பட்டுள்ள அநியாயங்கள் பற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கு தீர்வுகாண வேண்டும். அதற்காக தான் முழு அடைப்புக்கு போராட்ட குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

வடகர்நாடகத்தில் நடைபெறும் முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் முழு ஆதரவு அளிக்கிறது. இதனால் வருகிற 2-ந் தேதி நடைபெற உள்ள முழு அடைப்பையொட்டி பெங்களூருவில் கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். மேலும் வடகர்நாடகம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து விதானசவுதாவை (சட்டசபை) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

வடகர்நாடகம் புறக்கணிக்கப்படுவதற்காக கர்நாடகத்தை பிரிக்க நினைப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அதனால் தனிமாநில கோரிக்கையை கைவிட்டு விட்டு வடகர்நாடகத்தின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்.

இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார். 

Next Story