தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் - உடுமலையில் ஜி.கே.வாசன்


தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் - உடுமலையில் ஜி.கே.வாசன்
x
தினத்தந்தி 29 July 2018 4:59 AM IST (Updated: 29 July 2018 4:59 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று உடுமலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

உடுமலை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து கலந்தாய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை சந்திக்கும் கலந்தாய்வு கூட்டம் உடுமலை ஏரிப்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட தலைவர் டி.ரெத்தினவேல் தலைமை தாங்கினார். இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் விடியல்சேகர், மாநில துணைத்தலைவர் ஈரோடு ஆறுமுகம், மாநில இளைஞர் அணி செயலாளர் யுவராஜ் உள்பட பலர் பேசினார்கள். மாநில செயற்குழு உறுப்பினர் யு.கே.பி.முத்துக்குமாரசாமி, இளைஞர் அணி மாநில துணைத்தலைவர் அபிராமி செந்தில்வேல், உடுமலை நகர தலைவர் ஏ.பாலகிருஷ்ணன், நாராயணசாமி, மலர் ஸ்டீபன் மற்றும் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு சொத்துவரியை உயர்த்தியது. இதற்கு த.மா.கா. எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே சொத்து வரிஉயர்வை திரும்ப பெற வேண்டும் அல்லது கணிசமான அளவு குறைக்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் உடுமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்லாவிட்டால் த.மா.கா.சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

திருப்பூர் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி மற்றும் ஆய்வு மையமும், தாராபுரத்தில் அரசு கல்லூரியும் தொடங்க வேண்டும். இதுவரை 25 தொகுதிகளில் கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் 200 தொகுதிகளில் கலந்தாய்வு பணிகள் நடத்திமுடிக்கப்படும்.

தேர்தல் கூட்டணி குறித்து, அன்றைக்கு இருக்கும் அரசியல் நிலவரம் குறித்து, கட்சிகளின் நிலை குறித்து, எந்தெந்த கட்சிகள் என்னென்ன நிலையை எடுக்கிறது என்பது குறித்து, த.மா.கா.வின் உண்மையான பலத்தை எந்த இயக்கம் அங்கீகரித்து அழைக்க நினைக்கிறது என்பதை அறிந்து உரியநேரத்தில் தாமதமின்றி தெரிவிக்கப்படும். இப்போதைக்கு அதுபற்றி சிந்திக்கவில்லை.

தேர்தல் என்றால் தமிழகத்தில் இனி கூட்டணி அரசியல்தான். இனி கூட்டணி அரசியல் என்பது தமிழகத்தில் காலத்தின் கட்டாயம். தேர்தல் நெருங்கும் போது த.மா.கா.கூட்டணி அரசியலில் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது. எல்லா கட்சியும் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணியில் இருந்துதான் ஆகவேண்டும். அது அந்த கட்சியில் உள்ள கூட்டணி கட்சிகள் விரும்பும் கூட்டணியாக இருக்கும். எங்கள் இயக்கத்தின் கூட்டணி, தொண்டர்கள் விரும்பும் கூட்டணியாக இருக்கும். மொத்தத்தில் எங்கள் இயக்கம் மக்கள் விரும்பும், வாக்காளர்கள் விரும்பும் கூட்டணியாக இருக்கும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினர்.

Next Story