சரபங்கா நதியில் கடத்தல் கும்பல் பதுக்கி வைத்திருந்த மணல் குவியல் கண்டுபிடிப்பு


சரபங்கா நதியில் கடத்தல் கும்பல் பதுக்கி வைத்திருந்த மணல் குவியல் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 29 July 2018 5:30 AM IST (Updated: 29 July 2018 5:30 AM IST)
t-max-icont-min-icon

தேவூர் அருகே கடத்தல் கும்பல் பதுக்கி வைத்திருந்த மணல் குவியலை கண்டுபிடித்த அதிகாரிகள் 500 யூனிட் மணலை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

தேவூர் ,

சேலம் மாவட்டம், தேவூர் அருகே அரசிராமணி பேரூராட்சி குள்ளம்பட்டி, கப்பரையான்காடு, அம்மன் கோவில், செட்டி பாலம், ஒடசக்கரை தேவூர், கைக்கோளபாளையம் உள்ளிட்ட பகுதியில் செல்லும் சரபங்கா நதியில் கடந்த 6 மாதங்களாக ஆங்காங்கே 20 அடிக்கும் மேல் ஆழமாக மணல் அள்ளி வெளியூர்களுக்கு டிப்பர் லாரியில் கடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக அரசிராமணி பேரூராட்சி கப்பரையான்காடு, அம்மன் கோவில், செட்டிபட்டி பகுதி சரபங்கா நதியில் இரவு, பகலாக அதிகளவில் திருட்டுத்தனமாக பொக்லைன், டிப்பர் லாரியில் மணல் அள்ளி ஆங்காங்கே 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மணல் குவிக்கப்பட்டு இருப்பதாக சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் ராமதுரை முருகனுக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில், சங்ககிரி தாசில்தார் அருள்குமார், தேவூர் வருவாய் ஆய்வாளர் முனிசிவபெருமாள், அரசிராமணி பேரூராட்சி கிராம நிர்வாக அலுவலர் கருப்பண்ணன் மற்றும் வருவாய்த்துறையினர் தேவூர் போலீசார் துணையுடன் அரசிராமணி செட்டிப்பட்டி பகுதியில் சரபங்கா நதியில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது மணல் கடத்தல் கும்பல் சரபங்கா நதியில் அள்ளி பதுக்கி வைத்திருந்த மணல் குவியலை அதிகாரிகள் குழுவினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த மணல் குவியலை டிராக்டர், டிப்பர் லாரிகளில் அள்ளிச்சென்று பொதுப்பணித்துறை வசம் வருவாய்த்துறையினர் ஒப்படைத்தனர்.

இதில் 500 யூனிட் மணல் இருப்பது அளவிடப்பட்டது. இந்த மணலை பொதுப்பணித்துறையினர் பொதுமக்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்ய உள்ளனர். அதே நேரத்தில் சரபங்கா நதியில் மணல் அள்ளி பதுக்கிய மர்ம கும்பல் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story