சேலத்தில் இன்று அரசு பொருட்காட்சி தொடக்கம்: 3,504 பயனாளிகளுக்கு ரூ.18.32 கோடியில் நலத்திட்ட உதவிகள்


சேலத்தில் இன்று அரசு பொருட்காட்சி தொடக்கம்: 3,504 பயனாளிகளுக்கு ரூ.18.32 கோடியில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 29 July 2018 5:38 AM IST (Updated: 29 July 2018 5:38 AM IST)
t-max-icont-min-icon

சேலம் போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சி இன்று தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 3,504 பயனாளிகளுக்கு ரூ.18.32 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

சேலம்,

சேலம் பழைய பஸ்நிலையம் அருகே போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் போஸ் மைதானத்தில் இன்று அரசு பொருட்காட்சி தொடக்க விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, அரசு பொருட்காட்சியை தொடங்கி வைத்து 3,504 பயனாளிகளுக்கு ரூ.18.32 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.

இவ்விழாவிற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்குகிறார். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.

அரசு பொருட்காட்சி தொடக்க விழா நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் சார்பில் 2 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.5 கோடி மதிப்பிலும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 500 பயனாளிகளுக்கு ரூ.8.50 கோடி மதிப்பிலும், வருவாய்த்துறையின் சார்பில் 325 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சமும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 300 பயனாளிகளுக்கு ரூ.1.59 கோடி மதிப்பிலும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் 100 பயனாளிகளுக்கு ரூ.2.10 கோடி மதிப்பிலும், வேளாண்மைத்துறையின் சார்பில் 100 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சம் மதிப்பிலும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 100 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சம் மதிப்பிலும், பட்டு வளர்ச்சித்துறை சார்பில் 33 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சம் மதிப்பிலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலும் உள்பட பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 3,504 பயனாளிகளுக்கு ரூ.18.32 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

மேலும், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடத்தப்படவுள்ள அரசு பொருட்காட்சியில் அரசின் கொள்கைகள், மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி-மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கோ-ஆப்டெக்ஸ், ஆவின், தாட்கோ, சேலம் மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பிலும், 12 அரசு சார்பு நிறுவனங்களும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்பொருட்காட்சி தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறவுள்ளது. மக்கள் தினமும் வந்து மகிழும் வகையில் ராட்சத ராட்டினம் மற்றும் டோரா, டோரா போன்ற விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி சார்பில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் மாலையில் நேரு கலையரங்கில் திரைப்பட மற்றும் நாடக நடிகைகளை கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story