மார்பகத்தை பாதுகாக்கும் உணவுகள்
மார்பக புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இறக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
மார்பக புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இறக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்றுநோய் வருவதற்கான ஆபத்தை குறைக்க முடியும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அவற்றுள் ஆன்டிஆக்சிடென்ட் மற்றும் நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந் திருக்கின்றன. அவை மார்பக புற்றுநோய் பாதிப்பில் இருந்து காக்க உதவுகின்றன. அத்தகைய உணவு வகைகள் குறித்து பார்ப்போம்.
கிரீன் டீ, உலகளவில் பரவலாக பருகப்படும் ஆரோக்கிய பானம். இதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட், உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது. அது மார்பக புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் தாக்கும் அபாயத்தை குறைக்க உதவுகிறது. மரபணுக்கள் சேதம் ஆகாமல் தடுக்கவும் துணைபுரிகிறது. கிரீன் டீயை தொடர்ந்து பருகிவந்தால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். உடல் எடை குறைப்புக்கும் கைகொடுக்கும். ஆனால் தரமான கிரீன் டீயை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
உடலில் புற்றுநோய் செல்களின் அசாதாரண வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் காய்கறி வகையை சேர்ந்த பிராக்கோலிக்கு இருக்கிறது. மார்பகம், சிறுநீர்பை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதில் அது முக்கியபங்கு வகிக்கிறது.
காளான்களை தொடர்ந்து உணவில் சேர்ப்பதும் அவசியமானது. காளான்களை தினமும் உணவில் சேர்க்கும் பெண்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு குறைவாக இருக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மாதவிடாய் சுழற்சி முடிவடையும் நிலையில் இருக்கும் பெண்கள் காளான்களை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
தக்காளி பழங்களை வேகவத்து உணவில் சேர்த்தால் உடல்நலம் மேம்படும். அதிலிருக்கும் லீகோபின் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டாக செயல்படுகிறது. பெண்களின் உடலில் லீகோபின் அதிகம் சேர்ந்தால், அவர்களுக்கு மார்பக புற்றுநோய் அபாயம் 22 சதவீதம் குறையும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கேரட்டில் கரோட்டினாய்டு நிறைந்திருக்கிறது. உடலில் அதிக அளவு கரோட்டினாய்டுகள் இருந்தால் மார்பக புற்றுநோய்க்கான அபாயம் 28 சதவீதம் குறையும். அதனால் பெண்கள் கேரட்டை அதிகம் சாப்பிடுவது நல்லது.
Related Tags :
Next Story