கை விரல் ஜாலம்.. கலைகள் ஏராளம்..
பன்முக கலைப்படைப்புகளுக்கு சொந்தக்காரர், முத்து ரம்யா. பெயிண்டிங், கார்விங், குல்லிங் போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்ற இவர், அலங்கார பொருட்களை உருவாக்கி அசத்துகிறார்.
பன்முக கலைப்படைப்புகளுக்கு சொந்தக்காரர், முத்து ரம்யா. பெயிண்டிங், கார்விங், குல்லிங் போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்ற இவர், அலங்கார பொருட்களை உருவாக்கி அசத்துகிறார். இவரது கைவிரல்கள் காட்டும் ஜாலம், கலைப்பொருட்களாக உருவாகி காண்பவர்கள் கண்களை கவர்கின்றன. கலைப்பிரியராக விளங்கும் இவர் என்ஜினீயரிங் படித்தவர். ஆரம்பத்தில் டிப்ளமோ முடித்தவர் குடும்ப சூழ்நிலையால் படிப்பை தொடரமுடியாமல் தவித்திருக்கிறார். ஓராண்டு இடைவெளிக்கு பிறகு என்ஜினீயரிங் படித்திருக்கிறார். தொடர்ந்து படித்து தற்போது கல்லூரி உதவி பேராசிரியராகிவிட்டார்.
31 வயதாகும் முத்து ரம்யா, திருநெல்வேலியை சேர்ந்தவர். இவருடைய தந்தை செல்லப்பா அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் பயிற்சியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாயார் வேலம்மாள், குடும்பத்தலைவி. சகோதரர் சங்கர்ராம், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். இவர்தான் முத்து ரம்யாவை படிக்கவைத்து தன்னைபோல் ஆசிரியர் பணியில் சேர வழிகாட்டியவர்.
முத்து ரம்யாவுக்கு சிறு வயதில் கலைப்பொருட்கள் உருவாக்குவதில் ஆர்வம் இருந்திருக்கிறது. அதையும் மேம்படுத்தி கல்வி பணிக்கு இடையே கலைப்படைப்புகளிலும் முத்திரை பதித்து வருகிறார். கலைப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளும் வாங்கியிருக் கிறார். ‘பெண்கள் கல்வியிலும், கலையிலும் ஈடுபாடு காட்டுவது அவசியமானது’ என்பது முத்துரம்யாவின் கருத்தாக இருக்கிறது. அதற்கான காரணத்தை அறிய அவரோடு உரையாடினோம்!
நீங்கள் டிப்ளமோ படிப்பை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
‘‘எனது தந்தை ஓட்டுனர் பயிற்சியாளராக பணி புரிந்ததால் என்னை தொழில் கல்வி படிக்கவைக்க விரும்பினார். அவரது விருப்பப்படி டிப்ளமோவில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படிப்பில் சேர்ந்து படித்தேன். படிப்பை முடித்ததும் தொடர்ந்து அதே துறையில் என்ஜினீயரிங் படிப்பில் சேர ஆசைப்பட்டேன். ஆனால் என் பெற்றோருக்கு அதில் விருப்பமில்லை. படிப்பு செலவுகளை சமாளிப்பதும் கஷ்டமாக இருந்தது. அதனால் ஒரு வருடம் படிப்பை தொடரமுடியாமல் வீட்டில் இருந்தேன். தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதில் நான் பிடிவாதமாக இருந்ததால் பின்பு என்ஜினீயரிங் படிக்க அனுமதித்தார்கள். அதில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்ததால் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்தது. அங்கு எம்.இ. படிப்பில் கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட ‘பெர்வேசிவ் கம்ப்யூட்டிங் டெக்லானஜி’ படிப்பை தேர்ந்தெடுத்து படித்தேன். அது அரிதானதொரு படிப்பு. எனக்கு வயர்லெஸ் துறையில் ஈடுபாடு இருப்பதால் கூடுதல் கவனம் செலுத்தி படித்தேன். அந்த சமயத்தில் என் அண்ணன் படிப்பை முடித்து வேலையில் சேர்ந்து விட்டதால் அவரே படிப்பு செலவுகளை ஏற்றுக்கொண்டார்’’
வாழ்க்கைக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்று கருதுகிறீர்கள்?
‘‘நமக்குள் இருக்கும் தனித்திறமைகளை மேம்படுத்த கல்வி மிக அவசியம். அதிலும் பெண்களுக்கு கல்வி மிகவும் முக்கியமானது. தந்தையைவிட தாயார்தான் பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவார். அதனால் பெண்கள் எவ்வளவு படித்து இருக்கிறார்களோ அது குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். அவர்களின் வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாக அமையும். யாரையும் சார்ந் திருக்காமல் கல்வி மூலம் சொந்தக்காலில் நிற்கலாம். கல்வியால்தான் வெளி உலக தொடர்பையும், அறிவாற்றலையும் வளர்த்துக்கொள்ள முடியும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்ல நம்மை தகுதியுள்ளவராக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு கல்வி பக்கபலமாக இருக்கும்.
உதவி பேராசிரியர் பணியை தேர்ந்தெடுத்ததற்கான காரணம்?
‘‘நமக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்காக ஆசிரியையாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். தொடர்ந்து எம்.இ. படிப்பை தொடர்ந்ததற்கு காரணமும் அதுதான். சேரன்மகாதேவியில் உள்ள ஸ்கேடு என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிகிறேன். எதை செய்தாலும் அதை வித்தியாசமாக செய்ய ஆசைப்படுவேன். வெறுமனே மாணவர்களுக்கு கல்வியை மட்டும் போதிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. பாடங்களை அப்படியே நடத்தாமல் அதனோடு தொடர்புடைய விஷயங்களையும் கற்றுக்கொடுக்கிறேன். எலக்ட்ரானிக்ஸ் துறையில் இப்போது என்னென்ன நவீன தொழில்நுட்பங்கள் வந்திருக்கின்றன? அதனை எப்படி கையாளுகிறார்கள்? அதனால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதையெல்லாம் விளக்க இந்த பணியை பயன்படுத்திக்கொள்கிறேன்’’
கல்வி பணியில் மறக்க முடியாத அனுபவம்?
‘‘பாலிடெக்னிக், என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு சென்று கருத்தரங்குகளில் பங்கேற்கிறேன். அங்கு படிப்புடன் வாழ்க்கை கல்வியையும் கற்றுக்கொடுக்கிறேன். கதைகள் வாயிலாக, வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கான வழிகளை போதிக்கிறேன். இந்த பணியை சேவை எண்ணத்தில் மேற்கொள்கிறேன். அதனால் நிறைய இடங்களில் இருந்து என்னை வகுப்பு எடுப்பதற்கு அழைக்கிறார்கள். நான் கற்றுக்கொடுக்கும் விஷயங்களை மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அதனால் விழிப்புணர்வு சார்ந்த விஷயங்கள் குடும்பம் முழுவதற்கும் சென்றடைகிறது’’
உங்களுக்கு கலை ஈடுபாடு எப்படி வந்தது என்பதை சொல்லுங்கள்?
‘‘சிறுவயதில் இருந்தே கலைப்படைப்புகள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். என்னுடைய ஈடுபாட்டை பார்த்து பெற்றோர், ‘நீ விரும்பியதை கேள். எங்களால் முடிந்தவற்றை வாங்கித்தருகிறோம்’ என்று ஊக்கமளித்தார்கள். எனது தந்தை ஓட்டுனராக இருந்ததால் வெளி இடங்களில், பார்த்த கலைப்பொருட்களை குறிப்பிட்டு, ‘நீயும் அதே மாதிரி செய்யலாமே’ என்று ஆலோசனை தருவார். தாயாரும் நான் கேட்பதையெல்லாம் கடைகடையாக அலைந்து வாங்கி வருவார். சிறுவயதில் கலைப்பணிக்கான பொருட்களை வாங்குவதற்கு பணம் கிடைக்காது. இப்போது பணம் இருந்தாலும் கலைப்பணிகளை செய்ய போதிய நேரம் கிடைப்பதில்லை. கல்லூரிக்கு சென்றுவிட்டு 6 மணிக்கு வீடு திரும்புவேன். அதன் பிறகு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் கலைப்பொருட்களை உருவாக்குகிறேன். எனது அண்ணி உமா என்ஜினீயரிங் முடித்து விட்டு பி.எச்டி. மேற்கொண்டு வருகிறார். அவரும் கலை ஈடுபாடு கொண்டவர். அவரும் ஊக்கம் தருவதால், தொடர்ந்து கலைப்பொருட்களை உருவாக்குகிறேன்’’
என்னென்ன கலைகளெல்லாம் உங்களுக்கு தெரியும்?
‘‘காபி பெயிண்டிங், கிளாஸ் பெயிண்டிங், அக்ரலிக் பெயிண்டிங், சோப் வேலைப்பாடு, சோள தோடு, காய்கறிகள் - பழங்களில் சிற்பங்கள், கிளே மோல்டிங், மியூரல் ஆர்ட் ஒர்க், டூடுல் ஆர்ட், பெயிண்டிங், பென்சில் ஸ்கெட்ச், விதவிதமான ரங்கோலி கோலங்கள் உள்பட ஏராளமான கலைப்படைப்புகளை உருவாக்கி இருக்கிறேன். டூடுல் ஆர்ட்டில் நான் வரைந்திருக்கும் ஓவியம் பார்ப்பதற்கு வளைவு கோடுகளாக தெரியும். ஆனால் எல்லாவற்றையுமே நேர் கோடுகளாகத்தான் வரைந்திருக்கிறேன். எங்கே ஆரம்பித்து எங்கே முடித்திருக்கிறேன் என்பது கூட மற்றவர்களுக்கு தெரியாது.
மண்டலா பெயிண்டிங் பார்ப்பதற்கு ரங்கோலி கோலம் மாதிரி தெரியும். இதனை வீட்டில் வைத்திருந்தால் நேர்மறையான எண்ணங்கள் மேலோங்கும் என்பது அமெரிக்கர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இதுதொடர்பாக அங்கு ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் நிறைய பேர் மண்டலா பெயிண்டிங்கை வீட்டில் மாட்டிவைக்க விரும்புகிறார்கள். என்னையும் தொடர்பு கொண்டு வரைந்து தருமாறு கேட்டிருக்கிறார்கள்.
குல்லிங் பேப்பர்களிலும் விதவிதமான படைப்புகளை உருவாக்கி இருக்கிறேன். சோப்பில் நான் உருவாக்கும் சிற்பங்கள் பலரை கவர்ந்திருக்கிறது. அது பார்க்க அழகாக இருப்பதால் திருமண தாம்பூலத்தில் வைப்பதற்கு கேட்கிறார்கள். உல்லன் நூல்களில் பெரும்பாலும் தொப்பிகள், பூ அலங்கார வேலைப்பாடுகளை உருவாக்குகிறார்கள். நான் அதில் பொம்மைகள் உருவாக்குகிறேன். எது கஷ்டம் என்று நினைக்கிறோமோ அதை செய்து பழகிவிட்டால் சாதாரணமானவைகள் எல்லாம் மிக எளிதாகிவிடும். அந்த எண்ணம்தான் பலவகையான கலைப்படைப்புகளை கற்றுக்கொள்ள என்னை தூண்டுகிறது. கல்வி பணியில் கவனம் செலுத்தினாலும் கலைகள் மீது தொடர்ந்து ஈடுபாடு கொண்டிருப்பதற்கு கல்லூரி நிர்வாகம் ஒத்துழைப்பு அளிக்கிறது. பேராசிரியர் ராகவன் என்னுடைய கலைத்திறனை வெளிப்படுத்து வதற்கு ஊக்கமளித்து வருகிறார்’’
கல்விக்கும், கலைக்கும் உள்ள தொடர்பு?
‘‘கலைப்பொருட்களை செய்து பழகும்போது ஆழ்ந்த கவனம் அதில் பதியும். அது படிப்பிலும் கவனச்சிதறலுக்கு இடம்கொடுக்காமல் பார்த்துக்கொள்ளும். ஞாபகத்திறனும், புரிந்து கொள்ளும் ஆற்றலும் மேம்படும். கலையில் ஈடுபாடு காண்பிப்பவர்கள் படிப்பிலும் சிறந்து விளங்குவார்கள். எப்படி நேர்த்தியாக கலைப்பொருட்களை உருவாக்குகிறார்களோ அதேபோல் படிப்பையும் சிறப்பாக பூர்த்தி செய்துவிடுவார்கள்’’
பெண்கள் கலைத்திறனில் ஜொலிக்க என்ன காரணம்?
‘‘ஆண்களை ஒப்பிடும்போது பெண்களுக்கு பொறுமை அதிகம். அதனால் எந்த கலையையும் எளிதில் கற்றுவிடுவார்கள். பெண் களுக்கு மன அழுத்தமும் அதிகம் உண்டாகும். அந்த நேரத்தில் கலையில் மூழ்கினால் மனம் அமைதி அடைந்துவிடும்’’
உங்களை போல் கலைப்படைப்புகளை உருவாக்குபவர்கள் அதன் மூலம் வருமானம் ஈட்டுவது எப்படி?
‘‘கலைப்படைப்புகளை உருவாக்கும் பெண்கள் வருமானம் ஈட்டுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. இணையதளங்கள் வழியாக தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தி வருமானம் ஈட்டலாம். நான் 7 ஆண்டு களாக வலைத்தள பக்கத்தில் எனது படைப்புகளை காட்சிப் படுத்தி வருகிறேன். நான் உருவாக்கும் படைப்புகளுக்கான செய்முறை விளக்கங்களையும் அதில் பதிவிடுகிறேன். அதை பார்த்து பலர் என்னை தொடர்புகொண்டு கலை நுணுக்கங்களை கற்றுக்கொள்கிறார்கள். என்னைப்போன்றவர்கள் வீட்டிலேயே சுயதொழில் தொடங்கியும் சம்பாதிக்கலாம். இப்போது சிறு தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டங்களும் இருக்கின்றன. வங்கி கடன் பெற்றும் தொழிலை விரிவுபடுத்தி வருமானம் ஈட்டலாம்’’
கல்வி - கலை இரண்டில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?
‘‘இரண்டையும் கைவிட மாட்டேன். கல்வியில் கவனம் செலுத்தினாலும் ஓய்வு நேரங்களில் கலையுடன் தொடர்பில் இருப்பேன். இரண்டுமே எனக்கு மன நிறைவை கொடுக்கிறது’’ என்கிறார். முத்துரம்யாவுக்கு திருமணம் ஆகவில்லை. பெற்றோர் வரன் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார்.
Related Tags :
Next Story