புதிய கட்சி பெயர், கொடியை சில நாட்களில் அறிவிப்பேன் டி.டி.வி. தினகரனின் சகோதரர் பாஸ்கரன் பேட்டி
புதிய கட்சி பெயர், கொடியை சில நாட்களில் அறிவிக்கப்போவதாக டி.டி.வி. தினகரனின் சகோதரர் பாஸ்கரன் கூறினார்.
தஞ்சாவூர்,
சசிகலா சகோதரியின் மகனும், டி.டி.வி. தினகரனின் சகோதரருமான பாஸ்கரன், தனது பெயரில் பேரவையை நடத்தி வருகிறார். இந்த பேரவையின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் 101–வது பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை தஞ்சையில் நேற்று வழங்கினார். நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்.
இதில் கலந்துகொண்ட பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:–
‘‘எனது குருவான எம்.ஜி.ஆர். நேர்மையான, தூய்மையான நல்லாட்சியை நடத்தினார். அவரைப்போல் பிரதமர் மோடியும் ஊழலற்ற ஆட்சியை நடத்தி வருகிறார். இனியாரும் ஊழல் செய்ய முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளார். ஊழல்வாதிகளுக்கு அவர் கிடுக்கிப்பிடி போட்டுள்ளார்.
எம்.ஜி.ஆரைப்போல தூய்மையான அரசியல் செய்ய வேண்டும் என்பது தான் எனது லட்சியம். அதன்படி எனது புதிய அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொடியை இன்னும் சிலநாட்களில் அறிவிக்க உள்ளேன். ஏழைகளுக்கு சேவை செய்வதற்காக எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்தார். அவருடைய வழியில் எனது அரசியல் பயணம் இருக்கும். மற்றவர்களை போல் நான் அரசியலுக்கு வரவில்லை. தமிழகத்தில் ஊழல் நிறைந்து காணப்படுகிறது. அதை மோடி பார்த்துக்கொண்டு இருக்கிறார். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.