வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி


வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 30 July 2018 4:15 AM IST (Updated: 30 July 2018 12:14 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட வெவ்வேறு விபத்துகளில் தந்தை, மகன் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள எசனை மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன் ஜான்பீட்டர் (வயது 38). இவருக்கு திருமணமாகி செல்வி (35) என்கிற மனைவியும், பூபதி என்கிற பிரவீன்குமார் (16) என்கிற மகனும், சரண்யா (13) என்கிற மகளும் உள்ளனர். ஜான்பீட்டர் பெரம்பலூரில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். பிரவீன்குமார் 10-ம் வகுப்பு வரை பள்ளிக்கு சென்றார். ஆனால் பொதுத்தேர்வு எழுதாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டு, பெரம்பலூரில் வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் கடையில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் மகன் பிரவீன்குமாருடன், ஜான்பீட்டர் மோட்டார் சைக்கிளில் பெரம்பலூருக்கு புறப்பட்டார். ஆத்தூர்-பெரம்பலூர் நெடுஞ்சாலையில், எசனை அருகே உள்ள நார்காரன்கொட்டகை அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிரே பெரம்பலூரில் இருந்து ஆத்தூரை நோக்கி வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து ஜான்பீட்டரும், பிரவீன்குமாரும் சாலையில் வெவ்வேறு இடங்களில் தூக்கி வீசப்பட்டனர். மோட்டார் சைக்கிள், சரக்கு ஆட்டோவின் கீழ்பகுதியில் சிக்கி கொண்டது. இதில் படுகாயமடைந்த தந்தை, மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடனே சரக்கு ஆட்டோ டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். ஜான்பீட்டரின் உறவினர்களும் விரைந்து வந்தனர்.

அப்போது அங்கே பலத்த மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாது ஜான்பீட்டர், பிரவீன்குமாரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவர்களின் உடல்களை உறவினர்கள் பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த விபத்து நடந்த முடிந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த சில மணி நேரங்களில் பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே மற்றொரு விபத்து ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகா கச்சிமைலூரை சேர்ந்த தங்கராசு மகன் சதிஷ் (21), பரமசிவம் மகன் பூபாலன் (20). இவர்கள் 2 பேரும் நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் பெரம்பலூருக்கு சொந்த வேலை நிமித்தமாக வந்து விட்டு மதியம் அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டனர். சதிஷ் மோட்டார் சைக்கிளை ஓட்ட, பூபாலன் பின்னால் அமர்ந்திருந்தார். பெரம்பலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு அருகே உள்ள சின்னாறு பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது அவர்களுக்கு முன்னால் சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

அப்போது சதிஷ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள், முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சதீஷ், பூபாலன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை அம்பத்தூரை சேர்ந்த லாரி டிரைவர் சண்முகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story