பர்கூர் வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை உடலுக்கு மலர் தூவி மலைக்கிராம மக்கள் அஞ்சலி


பர்கூர் வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை உடலுக்கு மலர் தூவி மலைக்கிராம மக்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 30 July 2018 3:00 AM IST (Updated: 30 July 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் வனப்பகுதியில் இறந்து கிடந்த யானையின் உடலுக்கு மலர் தூவி மலைக்கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் பர்கூர் வனச்சரகர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அடர்ந்த வனப்பகுதியான எலச்சிபாளையத்தில் சென்றபோது துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அந்த இடத்திற்கு வனத்துறையினர் சென்று பார்த்தனர். அப்போது அங்கு யானை ஒன்று இறந்து கிடந்தது.

உடனே அவர்கள் இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரிக்கும், சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை டாக்டர் மனோகரனுக்கும் தகவல் கொடுத்தார்கள். இதைத்தொடர்ந்து கால்நடை டாக்டர் அங்கு சென்று யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

இதுபற்றி கால்நடை டாக்டர் மனோகரன் கூறும்போது, ‘இறந்தது ஆண் யானை. அந்த யானைக்கு 10 வயது இருக்கும். சொத்தை பல் வலி காரணமாக அந்த யானை 10 நாட்களுக்கு மேல் எந்த உணவும் உண்ண முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்து உள்ளது. மேலும் தண்ணீர் மட்டும் குடித்தபடி அந்த பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. அதுமட்டுமின்றி சொத்தை பல் தாக்கிய இடத்தில் அதிக அளவு சீழ் பிடித்து நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது’ என்றார்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு யானையின் உடலுக்கு மலர் தூவி மலைக்கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் யானையின் உடல் மற்ற விலங்குகளுக்கு உணவாக விடப்பட்டது.


Next Story