ஈரோட்டில் சரக்கு ரெயில் மோதி என்ஜின் தடம் புரண்டது
ஈரோட்டில் சரக்கு ரெயில் மோதி என்ஜின் தடம் புரண்டது.
ஈரோடு,
ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் ஏறி, இறங்க வசதியாக 4 நடைமேடைகள் உள்ளன. இதில் முதல் நடைமேடைக்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் சரக்கு ரெயில்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் கேரளா மாநிலம் இருமயத்தில் இருந்து பெங்களூரு நோக்கி எண்ணெய் பாரம் ஏற்றிக்கொண்டு செல்லும் சரக்கு ரெயில் நேற்று அதிகாலை 4.30 மணிஅளவில் ஈரோட்டிற்கு வந்துகொண்டு இருந்தது.
அப்போது ஈரோடு ரெயில் நிலையத்தில், சரக்கு ரெயில் செல்லும் தண்டவாளத்தில் இருந்து பிரிந்து செல்லும் மற்றொரு தண்டவாளத்தில் என்ஜின் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. சரக்கு ரெயில் ஈரோட்டை கடந்து சென்றபிறகு என்ஜினை மீண்டும் பணிமனைக்கு கொண்டு செல்வதற்காக தண்டவாளங்கள் பிரியும் இடத்திற்கு அருகிலேயே என்ஜின் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த என்ஜின் மீது சரக்கு ரெயில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் என்ஜின் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது. சரக்கு ரெயிலும், என்ஜினும் மோதிய சத்தம் கேட்டதும் டிரைவர் ரெயிலை நிறுத்தினார்.
இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு தடம் புரண்ட என்ஜினை தண்டவாளத்தில் நிலைநிறுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். பகல் 11.15 மணிஅளவில் என்ஜின் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டு பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே சரக்கு ரெயிலில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாததால் வழக்கம்போல் பெங்களூரு நோக்கி புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈரோட்டில் சரக்கு ரெயில் மோதி என்ஜின் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.