வாய்க்காலில் தண்ணீர் திறப்பு ‘9,700 ஏக்கர் பாசன வசதி பெறும்’ என அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


வாய்க்காலில் தண்ணீர் திறப்பு ‘9,700 ஏக்கர் பாசன வசதி பெறும்’ என அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 30 July 2018 4:30 AM IST (Updated: 30 July 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே புகளூர் வாய்க்காலில் இருந்து, பாப்புலர் முதலியார் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த வாய்க்காலில் செல்லும் நீர் மூலம் 9,700 ஏக்கர் பாசன வசதி பெறும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

நொய்யல்,

கரூர் மாவட்டத்திலுள்ள புகளூர் ராஜ வாய்க்கால் மற்றும் பாப்புலர்முதலியார் வாய்க்கால் ஆகியவற்றில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடந்தது. இந்த நிலையில் அந்த வாய்க்காலில் உள்ள வேண்டாத செடிகள் உள்ளிட்டவை களையப்பட்டு வாய்க்கால் ஆழப்படுத்தப்பட்டது. தற்போது காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டு கரைபுரண்டு ஓடுவதால், பாசனத்திற்காக அந்த வாய்க்காலில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் செம்படாபாளையத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மதகை திருகி புகளூர் வாய்க்காலில் இருந்து, பாப்புலர் முதலியார் வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட்டார். பின்னர் அனைவரும் அதில் மலர்தூவி தண்ணீரை வரவேற்றனர். புகளூர் ராஜவாய்க்காலில் சில நாட்களுக்கு முன்பே தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உதவி செயற்பொறியாளர் பிரபாகர், உதவி பொறியாளர் ஸ்ரீதர், முன்னாள் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியன், புகளூர் பாசன வாய்க்கால் விவசாய சங்க தலைவர் நடராஜன், செயலாளர் ராமசாமி, பேரூராட்சி செயலாளர்கள் புஞ்சை புகழூர் வக்கீல்கள் சரவணன், காகிதபுரம் சதாசிவம், தோட்டக்குறிச்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து நிருபர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புகளூர் மற்றும் பாப்புலர் வாய்க்கால் ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டது. இதன் மூலம் 9,700 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். கரூர் மாவட்டம் முழுவதும் 14 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் தூர்வாரும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புகளூரில் காவிரி ஆற்றில் புதிய கதவணை விரைவில் கட்டப்படும். அதற்கான ஆய்வு பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் 1 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இத்திட்டத்தினை முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story