மணப்பாறை அருகே கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதல்; 14 பேர் படுகாயம்


மணப்பாறை அருகே கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதல்; 14 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 30 July 2018 4:15 AM IST (Updated: 30 July 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதியதில் 14 பேர் படுகாயமடைந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற புதிய பஸ்சும் விபத்தில் சிக்கியது.

மணப்பாறை,

மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டி பிரிவு சாலை அருகே திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு கண்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது திருச்சியில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பஸ் கண்டெய்னர் லாரியின் பின்பகுதியில் மோதியது.இதில் பஸ்சின் முன் பகுதி சேதமடைந்தது.

அப்போது திருச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கு சென்று கொண்டிருந்த சமீபத்தில் புதிதாக இயக்கப்பட்ட அரசு பஸ், ஏற்கனவே விபத்துக்குள்ளான அரசு பஸ்சின் பின் பகுதியில் மோதியது.

இந்த விபத்தில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 50), திண்டுக்கல்லை சேர்ந்த கணேசன்(54), எட்வர்ட்(18), பாலமுருகன், சபரிநாதன், கண்டெய்னர் லாரி டிரைவர் ஜெயராஜ் (38), பழனியை சேர்ந்த காமாட்சி சுந்தரம், புதுக்கோட்டையை சேர்ந்த சித்திக் (55) வாடிப்பட்டியை சேர்ந்த சேகர், வடமதுரையை சேர்ந்த மகேஷ்வரன், தொட்டியத்தை சேர்ந்த பிரசாத், திண்டுக்கல்லை சேர்ந்த அமிர்தம், திருவாரூரை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சிலர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மணப்பாறை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுகி, சப்-இன்ஸ்பெக்டர் ரூபினி, நெடுஞ்சாலை ரோந்து வாகன சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான பஸ்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும், இந்த விபத்து குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story