தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்கள் விவசாயிகள் கவலை


தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்கள் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 30 July 2018 3:15 AM IST (Updated: 30 July 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மூங்கில்துறைப்பட்டு,


மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பொருவளூர், பொரசப்பட்டு, ஈருடையாம்பட்டு, சவேரியார்பாளையம், மைக்கேல்புரம், பாக்கம், புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும்.

இப்பகுதி விவசாயிகள் ஏரி மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி நெல், கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்தனர்.

இந்த நிலையில் போதிய மழையின்றி ஏரிகள் வறண்டதால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இப்பகுதி விவசாயிகள் கிணற்று பாசனத்தை நம்பி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்தனர். பின்னர் கிணற்று தண்ணீர் மூலம் பாசனம் செய்து பராமரித்து வந்தனர். நெற்பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து வந்த நிலையில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால், கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டன.

இதனால் பயிர்களுக்கு முழுமையாக தண்ணீர் பாய்ச்ச முடியாததால், விவசாயிகள் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் அனைத்தும் கருகின. இதனால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக விட்டுள்ளனர்.

இதேபோல் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் கருகி வருகின்றன. அதிகம் செலவு செய்து பராமரித்து வந்த நெற்பயிர்கள் தங்கள் கண் முன்னே கருகி வருவதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மீதமுள்ள பயிர்களை காப்பாற்ற மழை வருமா? என ஏக்கத்துடனும், கண்ணீருடனும் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.


இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், எங்கள் கிராமத்தில் நாங்கள் நெல் நடவு செய்த சில நாட்களிலேயே ஏரி தண்ணீர் இன்றி வறண்டது. பின்னர் கிணற்று தண்ணீரை பயன்படுத்தி பாசனம் செய்து வந்தோம். ஆனால் சில நாட்களிலேயே நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகளும் தண்ணீர் இன்றி வறண்டு விட்டன. இதனால் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாசனம் செய்யாததால், பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் கருகின. மேலும் விளை நிலங்கள் பாளம் பாளமாக வெடித்து காணப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மழை பெய்யவில்லை எனில், மீதமுள்ள நெற்பயிர்களையும் காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும். மேலும் நோய் தாக்குதலாலும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே கருகிய நெற்பயிர்களை கணக்கெடுத்து அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். 

Next Story