ஊட்டி அருகே 2 பேரை தாக்கிய சிறுத்தைப்புலி, கூண்டில் சிக்காததால் வனத்துறையினர் ஏமாற்றம்
ஊட்டி அருகே 2 பேரை தாக்கிய சிறுத்தைப்புலி இதுவரை கூண்டில் சிக்கவில்லை. இதனால் வனத்துறையினர், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஊட்டி,
ஊட்டி அருகே தூனேரி கிராமத்தில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் கடந்த 25–ந் தேதி தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறித்து கொண்டிருந்தனர். அப்போது சிறுத்தைப்புலி ஒன்று அங்கு வந்தது. இதை கண்ட தொழிலாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது கூடலூர் தேவாலாவை சேர்ந்த தோட்ட தொழிலாளர் வேல்முருகன்(வயது 38) என்பவரை சிறுத்தைப்புலி தாக்கியது. உடனே தொழிலாளர்கள் திரண்டு வந்து கூச்சலிட்டனர். இதனால் சிறுத்தைப்புலி அங்கிருந்து சென்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணித்தனர். அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே குட்டியுடன் மறைந்து இருந்த சிறுத்தைப்புலி வனவர் திருமூர்த்தி (வயது 35) என்பவரை தாக்கியது. பின்னர் காயம் அடைந்த வேல்முருகன், வனவர் திருமூர்த்தி ஆகியோர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். குட்டியுடன் உள்ள சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையொட்டி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில் தேயிலை தோட்டத்தில் வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்தனர். ஆனால் இதுவரை சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், உதவி வன பாதுகாவலர் சரவணன், வனச்சரகர் முத்துசாமி உள்ளிட்ட வனத்துறையினர் கூண்டு வைத்த இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் கூண்டின் முன் பகுதியில் சென்சார் கருவியை பொருத்தினர்.
கூண்டுக்குள் இருக்கும் உணவை சாப்பிடுவதற்காக சிறுத்தைப்புலி நுழையும் போது சென்சார் கருவியில் இருந்து வனத்துறையினர் செல்போனுக்கு தகவல் வரும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 5 நாட்களுக்கு மேலாகியும் சிறுத்தைப்புலி பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும் இதுவரை கூண்டில் சிறுத்தைப்புலி சிக்காததால், வனத்துறையினர் மட்டுமின்றி பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.