வனத்தையும், நீர் ஆதாரங்களையும் காக்க புலிகளை பாதுகாக்க வேண்டும், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் பேச்சு


வனத்தையும், நீர் ஆதாரங்களையும் காக்க புலிகளை பாதுகாக்க வேண்டும், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் பேச்சு
x
தினத்தந்தி 30 July 2018 4:00 AM IST (Updated: 30 July 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

வனத்தையும், நீர் ஆதாரங்களையும் காக்க புலிகளை பாதுகாக்க வேண்டும் என்று ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் கூறினார்.

பொள்ளாச்சி,

ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் பொள்ளாச்சி வனச்சரகம் சார்பில் உலக புலிகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பொள்ளாச்சியில் என்.ஜி.எம். கல்லூரியில் இருந்து புறப்பட்ட பேரணியை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய விலங்கான புலிகளை பாதுகாக்க வலியுறுத்தி உலக புலிகள் தினம் இன்று (நேற்று) கொண்டாடப்படுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு ரஷியாவில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் இந்தியாவில் தான் 60 சதவீத புலிகள் காணப்படுகின்றன. புலிகள் இருந்தால் தான் அது நல்லதொரு வனப்பகுதியாக இருக்கும்.

காடுகள் நல்ல நிலையில் இருக்க அங்கு புலிகள் இருக்க வேண்டும். புலிகள் இல்லையென்றால் அந்த காடு நல்ல காடாக இருக்க முடியாது. புலிகளின் வாழ்வாதாரத்தை பேணுதல் வேண்டும். காடு, மலை இல்லாவிட்டால் உலகில் எந்தவொரு உயிரினமும் வாழ முடியாது. 20-ம் நூற்றாண்டில் 40 ஆயிரம் புலிகள் இருந்தது கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது. மனித வளர்ச்சி, இயற்கைக்கு எதிரான செயல் போன்ற காரணங்களால் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. புலிகளை பாதுகாக்க நாடு முழுவதும் 50 புலிகள் காப்பகங்கள் தொடங்கப்பட்டன.

தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை, ஆனைமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் மற்றும் முதுமலை ஆகிய புலிகள் காப்பகங்கள் உள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகம் அரிய வகை வனப்பகுதியாகும். இங்கு அனைத்து உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன. மேலும் புலிகளும் நல்ல எண்ணிக்கையில் உள்ளது. வனத்தையும், நீர் ஆதாரங்களையும் காக்க புலிகளை பாதுகாக்க வேண்டும் என்று அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேரணியில் மாணவ-மாணவிகள் புலிகளை காப்பது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். பேரணி பாலக்காடு ரோடு, பஸ் நிலையம் வழியாக சப்-கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது.

இதில் புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து, வனச்சரகர் காசிலிங்கம், வனவர் மணிகண்டன், பிரபாகரன், சரண்யா, டாக்டர் ஆல்வா மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

உலக புலிகள் தினத்தை முன்னிட்டு வால்பாறை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் அமைந்துள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணி பள்ளிக்கூடத்திலிருந்து புறப்பட்டு காந்தி சிலை பஸ் நிறுத்தம் வரை சென்று பள்ளிக்கூடம் வந்தடைந்தது. பேரணியில் உண்டு உறைவிடப்பள்ளி தாளாளர் செந்தில், மானாம்பள்ளி, வால்பாறை வனச்சரகங்களின் வனவர்கள் கோபாலகிருஷ்ணன், அனந்தன், சபரீஸ்வரன், நித்யா மற்றும் வனப்பாதுகாவலர்கள், வனக்காவலர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வால்பாறை வனச்சரகர் சக்தி கணேஷ் கூறுகையில், புலிகளை பாதுகாப்பதால் வனப்பகுதிகள் செழிப்பாக இருக்கும். வனப்பகுதிகள் செழிப்பாக இருந்தால் மழை கிடைக்கும். மழை கிடைத்தால் ஆறு, குளங்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்படும். இதன் மூலம் விவசாயம் செழிக்கும். மாணவ பருவம் முதல் வனங்களையும், வனவிலங்குகளையும் நேசிக்கவும், இயற்கையை பாதுகாக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

Related Tags :
Next Story