கலப்பட புகாரால் ரூ.70 லட்சம் மதிப்புள்ள சமையல் எண்ணெய் பறிமுதல், தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைப்பு
நெகமம் அருகே கலப்பட புகாரால் ரூ.70 லட்சம் மதிப்புள்ள சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த தொழிற்சாலைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
நெகமம்,
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள வரதனூர் ஊராட்சிக்குட்பட்ட மூட்டாம்பாளையத்தில் ஒரு சமையல் எண்ணெய் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. திருச்சூரை சேர்ந்த ஆல்பிரட் என்பவருக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் எண்ணெயில் கலப்படம் இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்குள்ள 2 டேங்கர் லாரிகளில் பார்வையிட்ட போது ஒரு டேங்கரில் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக பாமாயிலும், மற்றொரு
டேங்கரில் சூரியகாந்தி எண்ணெய்க்கு (சன்பிளவர் ஆயில்) பதிலாக பாமாயிலும் இருந்தது. இதனை தொடர்ந்து அதில் இருந்து சிறிதளவில் எண்ணெய் மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெயை ஆய்வுக்காக அதிகாரிகள் எடுத்தனர். பின்னர் அங்கிருந்த 64 ஆயிரத்து 777 லிட்டர் சமையல் எண்ணெயை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.70 லட்சமாகும்.
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:–
இந்த தொழிற்சாலைக்கு ஆந்திரா மற்றும் தூத்துக்குடியில் இருந்து பாமாயில் வாங்கி வந்து இங்கு தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் தயாரித்து பல்வேறு பெயரில் அச்சிடப்பட்ட பேக்கிங் மற்றும் டின் போன்றவற்றில் அடைத்து கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். சோதனையில் 64,777 லிட்டர் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவை உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. தற்போது தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. பரிசோதனையில் சமையல் எண்ணெயில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.