16 ஆசிரியர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்


16 ஆசிரியர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 30 July 2018 3:15 AM IST (Updated: 30 July 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

முதன்மை கல்வி அலுவலரை கண்டித்தும், அவரை பணிமாறுதல் செய்து துறைரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரியும் 16 ஆசிரியர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

திருவண்ணாமலை,


திருவண்ணாமலை மாவட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 16 ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் பக்தவச்சலம், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் தாஸ், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் தியாகராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.


அப்போது, ‘மை சைல்டு, மை கேர்’ என்ற தலைப்பின் கீழ் ரசீது எதுவும் இல்லாமல் லட்சக்கணக்கில் முதலீடு பணம் வசூல் செய்வதை கூட்டமைப்பு வன்மையாக கண்டித்தும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஆசிரியர் விரோத போக்கினை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் சங்க பொறுப்பாளர்கள் மீது தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே எழுதி வாங்கிக் கொண்டு மிரட்டி பணியிடை நீக்கம் செய்து, திடீர் பார்வையிடுவது போன்ற பழிவாங்கும் போக்கினை கையாளும் முதன்மை கல்வி அலுவலரை கண்டித்தும், அவரை பணிமாறுதல் செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீளாய்வுக்கூட்டம் என்ற பெயரில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறிப்பாக ஆசிரியைகளை ஒருமையில் தரக்குறைவாக பேசும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கல்வி செயல்பாடுகளின் முன்னேற்றத்திற்கு எந்த வகையிலும் உதவாத விளம்பர நோக்கில் செயல்படும் முதன்மை கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.


உண்ணாவிரதத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் உள்பட 16 சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது நிர்வாகிகள் பேசுவதை ஒருவர் ‘ஸ்டாண்டு’ போட்டு வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அப்போது நாங்கள் யாரும் வீடியோ பதிவு செய்ய கூறவில்லையே என்று ஆசிரியர்கள் கூறி அந்த நபரை அடித்து, உதைத்து வீடியோ கேமராவை உடைக்க முயன்றனர்.

இதில் வீடியோ கேமராவின் ‘ஸ்டாண்டு’ உடைந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரை, வீடியோ கேமராவுடன் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இந்த உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. 

Next Story