கள்ளக்காதலனுடன் சிக்கியதால் இளம்பெண் தற்கொலை


கள்ளக்காதலனுடன் சிக்கியதால் இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 30 July 2018 3:30 AM IST (Updated: 30 July 2018 6:08 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் கள்ளக்காதலனுடன் கையும் களவுமாக பிடிபட்டதால் 3-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

அனுப்பர்பாளையம்,


சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 32). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி புதுத்தெருவை சேர்ந்த பாண்டிசெல்வி என்ற கவிதா (22) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு அசோக்குமார் மனைவி பாண்டிசெல்வியுடன் திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையத்தை அடுத்த குருவாயூரப்பன்நகர் பகுதியில் உள்ள 3 மாடி கட்டிடத்தில் 3-வது மாடியில் வசித்து வந்தார்.

மேலும் அவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை பாண்டிசெல்வி சங்ககிரியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு செல்வதாகவும் இரவில் அங்கேயே தங்கி கொள்கிறேன் என்றும் அசோக்குமாரிடம் கூறிவிட்டு குழந்தையை தூக்கிச்சென்றுள்ளார். இதையடுத்து அசோக்குமார் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் ஊருக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற பாண்டிசெல்வி நேற்று மாலை திடீரென ஒரு வாலிபருடன் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்த வீட்டு உரிமையாளர் அன்பழகனிடம் வீட்டு சாவி உள்ளதா? என்று பாண்டிசெல்வி கேட்டுள்ளார். ஊருக்கு செல்வதாக கூறி சென்ற அவர் வேறு ஒரு வாலிபருடன் திரும்பி வந்ததால் சந்தேகமடைந்த அன்பழகன், அசோக்குமாரிடம் செல்போனில் பேசி உடனடியாக வருமாறு கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அசோக்குமார், வீட்டிற்கு சென்றபோது மனைவி பாண்டிசெல்வி ஒரு வாலிபருடன் நின்று கொண்டிருப்பதை கண்டு ஆத்திரமடைந்தார். அப்போது பாண்டிசெல்விக்கும், அசோக்குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வாலிபரை போலீசில் பிடித்து கொடுக்க அசோக்குமார், அன்பழகன் ஆகியோர் முடிவு செய்தனர். பின்னர் அவர்கள் அந்த வாலிபரை அழைத்து கொண்டு மாடிப்படி வழியாக இறங்கி கொண்டிருந்தனர்.

அதே நேரத்தில் அந்த வாலிபரை போலீசில் பிடித்து கொடுக்கிறார்களே என்று நினைத்து மனமுடைந்த பாண்டிசெல்வி திடீரென அவர் வசித்து வந்த வீட்டின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். அவர் கண் இமைக்கும் நேரத்தில் 40 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்ததால் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த நேரத்தில் இந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து கட்டி வைத்தனர். பின்னர் இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.


அதன் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் அந்த வாலிபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், சிவகாசியை சேர்ந்த பட்டாசு ஆலை தொழிலாளி பாண்டியராஜன் (22) என்பது தெரிய வந்தது.

மேலும் பாண்டிசெல்விக்கு திருமணம் ஆவதற்கு முன்பே அவருக்கும் பாண்டியராஜனுக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கம் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்றுகாலை சிவகாசியில் இருந்து திருப்பூர் வந்த கள்ளக்காதலன் பாண்டியராஜன் பாண்டிசெல்வியை புதிய பஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.

இதன் பின்னரே பாண்டிசெல்வி கணவரிடம் சங்ககிரியில் உள்ள அக்கா வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் சங்ககிரி செல்லாமல் பாண்டியராஜனை அழைத்து கொண்டு பாண்டிசெல்வி அவருடைய வீட்டிற்கு சென்றதால் கணவன் கண் எதிரே கள்ளக்காதலனுடன் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். இதனால் அவமானமடைந்த பாண்டிசெல்வி 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது. 

Next Story