உடன்குடியில் கடை அடைப்பு போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு


உடன்குடியில் கடை அடைப்பு போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு
x
தினத்தந்தி 29 July 2018 9:52 PM GMT (Updated: 29 July 2018 9:52 PM GMT)

உடன்குடியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.

உடன்குடி,


உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் ரவி தலைமை தாங்கினார். பொருளாளர் அப்துல் காதர் வரவேற்றார். செயலாளர் கந்தன் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில், உடன்குடி பஜாரை சுற்றியுள்ள 4 வழி ரோடுகள் மற்றும் திசையன்விளை ரோடு ஆகியவற்றை முழுமையாக புதுப்பிக்க நெடுஞ்சாலைத்துறையை கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், உடன்குடியில் இருந்து பெரியதாழைக்கு புதியதாக டவுன் பஸ் இயக்கவும், திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினம், உடன்குடி, பெரியதாழை வழியாக நாகர்கோவிலுக்கும் திருச்செந்தூரில் இருந்து பரமன்குறிச்சி, உடன்குடி, திசையன்விளை, நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கும் புதிய பஸ்கள் இயக்க போக்குவரத்து துறையை கேட்டுக்கொள்வதும், திங்கட்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தையை தினசரி மார்க்கெட்டாக மாற்றி தர கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த 5 அம்ச கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இல்லை என்றால் 15 நாளில் உடன்குடியில் முழு கடை அடைப்பு நடத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணைச் செயலாளர் ராஜா நன்றி கூறினார். 

Next Story