பெண்ணை கொன்ற தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி


பெண்ணை கொன்ற தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி
x
தினத்தந்தி 30 July 2018 3:55 AM IST (Updated: 30 July 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே, பெண்ணை கொன்ற தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சங்கரன்கோவில்,


நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேல மரத்தோணி காலனி தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சங்கரேசுவரி (வயது 35). ஆடு மேய்க்கும் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (45), கூலி தொழிலாளி.

நேற்று முன்தினம் மாலை ஊர் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சங்கரேசுவரி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சங்கரேசுவரிக்கு கருப்பசாமி பாலியல் தொந்தரவு கொடுத்ததும், இதனால் ஏற்பட்ட தகராறில் சங்கரேசுவரி கம்பால் அடித்துக் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.


இச்சம்பவம் தொடர்பாக கருப்பசாமியை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை ஊர் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் கருப்பசாமி விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக கரிவலம்வந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கருப்பசாமியை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சங்கரேசுவரியின் உறவினர்கள், ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.

கருப்பசாமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கருப்பசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் விசாரணையில், போலீசுக்கு பயந்து கருப்பசாமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story