தானாக வாழுமா தேன்தமிழ்?


தானாக வாழுமா தேன்தமிழ்?
x
தினத்தந்தி 30 July 2018 6:44 AM GMT (Updated: 30 July 2018 6:44 AM GMT)

யாரும் தமிழை வாழ வைக்கவோ வளர்க்கவோ எதுவும் செய்ய வேண்டாம். எத்தனை தடைகள் வந்தாலும் எத்தனை இடர்கள் நேரிட்டாலும் தமிழ் எப்போதும்போல் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும் என்றே பலரும் பேசுகின்றனர்.

தமிழர்களாகிய நம்மை ஆறுதல்படுத்த இந்தச் சொற்கள் பயன்படலாமே தவிர, தானாகத் தமிழ் வாழ்ந்துவிட முடியாது. தற்போதைய அரசியல் சமூக பொருளாதார சூழல்களில் தமிழ் அழிந்துவிடக் கூடிய நிலையில்தான் உள்ளது. தானாக எல்லாம் நடக்கும் என்பது பழைய பொய். தமிழை நாம் பாதுகாத்து வளர்த்தால்தான் தமிழ்வாழும்.

அவ்வப்போது தமிழுக்கு இடர் ஏற்பட்ட போதெல்லாம் யாரோ சிலரின் முயற்சிகளால் தமிழ் பாதுகாக்கப்பட்டு நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தமிழை பாதுகாத்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டியது நம் தலையாய கடமை.

இன்னும் சில பத்தாண்டுகளில் அழிந்துவரும் மொழிகளின் பட்டியலில் தமிழ் உள்ளது என்று யுனெஸ்கோ நிறுவனமும் அறிவித்துள்ளது. அதற்கான காரணங்களையும் சொல்லியுள்ளது. கல்வி மொழியாக, அலுவல் மொழியாக, வழிபாட்டு மொழியாக, வேலைவாய்ப்புக்கு உரிய மொழியாக இல்லாத எந்த மொழியும் காலப்போக்கில் அழிந்துவிடும்.

கடந்த 2010-ம் ஆண்டு வாக்கில் அந்தமான் தீவுக்கூட்டத்தில் ‘போ’ என்னும் மொழியைப் பேசிய கடைசிப் பெண் இறந்துவிட்டார். அவரோடு சேர்ந்து அந்தப் ‘போ’ மொழியும் இறந்து போனது. ஆக நம் கண்முன்னால் மொழிகள் அழிவதைப் பார்க்கிறோம். கட்டிடம் ஒன்று விழுந்துவிட்டால் அதை உருவாக்கிவிட முடியும். ஒரு நகரமே கடலில் மூழ்கி விட்டாலும் அதைத் திரும்ப நிறுவ முடியும். மொழி அப்படிப் பட்டதல்லவே!

மொழியை உருவாக்க முடியாது. ஆனால் அதை வளர்க்கவும் பரப்பவும் பாதுகாக்கவும் முடியும். கடல்கோள்களால் தமிழின் இலக்கியங்கள், இலக்கணங்கள் ஏராளமாக அழிந்துள்ளன. அயலார் படையெடுப்புகளால் அன்னைத் தமிழ், தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. பிற இனத்தாரின் பண்பாட்டுப் படையெடுப்பாலும் நம் மொழி சிதைவுக்குள்ளாகி இருக்கிறது.

காலந்தோறும் ஏதேனும் ஒருவடிவில் தமிழை அழிக்கக் கூடிய தாக்குதல்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி இருந்தும் தமிழ் என்ன அழிந்தாவிட்டது? இன்றும் பத்துக்கோடி பேர் இனிய தமிழைப் பேசுகின்றனரே. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ஆட்சி மொழியாக தமிழ் விளங்குகிறதே. உலகின் பல மூலைகளிலும் தமிழர்கள் பரவி உள்ளதன் அடிப்படையில் அங்கெல்லாம் தமிழ் பேசப்படுகிறேதே என்று சொல்கிறார்கள்.

ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தமிழைப் பாதுகாத்தவர்கள் இருந்திருப்பார்கள். அவர்கள் மன்னர்களாக... புலவர்களாக... புரவலர்களாக... இருந்திருப்பார்கள். தமிழ்காப்புப் பணியில் பொதுமக்களும் இருந்திருக்கலாம். வழக்கம்போல் வரலாறு அவர்களைப் புறந்தள்ளி இருக்கலாம்.

நம் கண்முன் கடந்துபோன இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையில் வந்த திருமண அழைப்பிதழ்களில் தமிழின் நிலை என்ன? ‘விவாஹ ஸுப முகூர்த்த பத்திரிகை’ என்ற தலைப்பு இருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இரண்டொரு தமிழ்ச்சொற்கள் இருக்கும். முழுவதும் சமஸ்கிருத ஆதிக்கமாகவே இருக்கும். அதிலிருந்து மீண்டு நல்ல தமிழில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வந்த நிலையிலும் தமிழுக்கு மற்றொரு இடரும் நேர்ந்துள்ளது. இன்றுவரும் பெரும்பாலான அழைப்பிதழ்கள் ஆங்கிலத்தில்தான் அச்சடிக்கப்படுகின்றன.

தமிழும் சமஸ்கிருதமும் கலந்து எழுதினால் மணியும் பவளமும் கலந்து கட்டிய மாலைபோல் இருக்கும் என்று, நம் முன்னோர்களின் உச்சம் தலையில் பனிக்கட்டியை வைத்தார்கள். அதை நம்பி நம் புலவர்கள் தமிழையும் சமஸ்கிருதத்தையும் கலந்து எழுதினார்கள். அப்படிப் பயன் படுத்துவதே மொழிநாகரிகம் என்றார்கள். பிறகு தமிழைத் தேட வேண்டிய நிலையில், தமிழர்கள் படைத்த நூல்கள் பலவும் சமஸ்கிருதமாகவே மாறின.

மணிப்பிரவாளம் தொடர்ந்திருந்தால் தமிழ்அடையாளம் தொலைந்திருக்கும். சமஸ்கிருதமாகவே மாறிக்கொண்டிருந்த தமிழை மீட்டுப் பாதுகாத்தவர்கள் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள் போன்றவர்கள் அல்லவா? தமிழ் தானாகத் தன்னைப் பாதுகாத்துக்கொண்டு வளர்ந்ததா?

தற்போதும் மற்றொரு மணிப்பிரவாளம் என்னும் நிலையில் ஆங்கிலச் சொற்களை மிகுதியாகக் கலந்து, பின்னொட்டாகத் தமிழ்ச்சொற்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கலந்து எழுதும் அவல நிலை வந்துவிட்டதே. தமிழ் மறைந்து ‘தமிங்கிலம்’ என்னும் மொழி பிறக்குமோ என்று நினைக்க வேண்டி உள்ளதே. தமிழ்த்தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர்களின் மொழியைக் கேட்டால், நம் தேன்தமிழ் தானாக வாழும் என்றா சொல்ல முடியும்?

தண்ணீர் என்ற சொல் தமிழில் இருக்கிறது. அதை ஒருகாலத்தில் ஜலம் என்று சொன்னால்தான் நமக்கு மரியாதை என்று நினைத்துப் பயன்படுத்தினோம். படாத பாடுபட்டுத் தண்ணீரை மீட்டுக்கொண்டு வரும் வழியிலேயே ‘வாட்டர்’ வந்து தண்ணீரை மூழ்கடித்துவிட்டது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவியல் பாட நூல்களை உருவாக்கியவர்கள், அறிவியல் கலைச்சொற்களுக்குச் சமஸ்கிருத சொற்களையே கையாண்டார்கள். பின்னர்தான் அந்தச் சமஸ்கிருதச் சொற்களை மாற்றி அவற்றுக்கிணையான தமிழ்ச்சொற்களைக் கொண்டுவந்தார்கள்.

பிறமொழிச் சொற்களையே பயன்படுத்தக் கூடாது என்று நான் சொல்லவில்லை. காலம் காலமாகத் தமிழ்த்தனம் கொண்ட தமிழாகவே உருமாறிவிட்ட பிறசொற்களைக் களைய வேண்டும் என்றும் சொல்லவில்லை. நம்மிடம் சொல் இல்லாத நிலையில், நம்மொழியில் சொல் உருவாக்க முடியாத நிலையில், தேவைக்கேற்ப பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தலாம். புதுச்சொல்லாக்கமே தேவையில்லை என்று சிலர் வாதிடுவது தமிழைப் பின்னுக்குத் தள்ளுமே தவிர முன்னுக்குக் கொண்டு வராது. தமிழுக்குப் புதுக்குருதி பாய்ச்சுவதுபோல்தான் புதுச்சொல்லாக்கங்கள்.

அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. அங்குதான் தமிழின் நம்பிக்கை வேர்விட்டுக் கொண்டிருந்தது. இருக்கும் அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வியைப் படிப்படியாகக் கொண்டுவருகிறார்கள். நம் கல்விக் கூடங்களில் தமிழ் அகற்றப்பட்டு ஆங்கிலமும் இந்தியும் மட்டும் இருக்கும் சூழல் வருகிறது.

வேற்றுமொழி படித்தால்தான் வேலை என்ற நிலையும் நம்கண் முன் அச்சுறுத்துகிறது. தமிழ் பேசத் தெரியாத தமிழ்க்குழந்தைகள் பெருகி வருகின்றனர். ‘என் குழந்தைக்கு தமிழ் வராது’ என்று சொல்வதில் பெருமை அடையும் நிலையில்தான் தமிழர்கள் உள்ளனர். தமிழ் நாளிதழ்களில் வரும் தலைப்புச் செய்திகளைப் படிக்கத் தெரியாத தமிழ்இளைஞர்கள் உருவாகி வருகிறார்கள்.

தமிழ் எழுத்துகளையே காவு கொடுக்க இன்றைய தமிழர்கள் தயாராகிவிட்டனர். குறுஞ்செய்தி, கருத்துரை, மடல் போன்றவற்றை ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதுகின்றனர்.

தமிழின் வாய்ப்புகள் ஒவ்வொன்றாகப் பறிபோகின்றன. பிறமொழிகளை நேசிப்போம்; கற்போம். அதற்காக நம் தாய்மொழியை இழக்க வேண்டியதில்லை. தாய்மொழியைப் பாதுகாப்பது என்பது மொழிவெறி அல்ல. நம் தகுதிகளில் உயர்ந்தது தாய்மொழியில் பேசுவதுதான் என்று உணருங்கள். தாய்மொழியில் தமிழ்மொழியில் பேசுவது என்பதே மொழியின் முதல் பாதுகாப்பு நடவடிக்கை.

இந்த நிலையில் தமிழ் தானாக வாழும். யாரும் வாழ வைக்க வேண்டாம் என்று நீங்களும் சொல்வீர்களாயின், மறைமுகமாகத் தமிழின் அழிவுக்குத் துணைபோகிறீர்கள். 

-கோ.மன்றவாணன்

Next Story