புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள சரஸ்வதி நட்சத்திரக்கூட்டம்
கற்பனைக்கு எட்டாத அளவுக்கு பெரிய அமைப்பான இந்த விண்மீன் பெருந்திரள்கள், ஒரு கைக்குள் இருக்கின்ற நாணயச் சில்லறைகளைப் போல ‘பல விண்மீன் திரள் குழுக்களைத்’ தன்னுள்ளே கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
பெருவெடிப்பு என்பதுதான் பிரபஞ்ச தோற்றம் மற்றும் வளர்ச்சியின் முதல் படி. நீண்ட நெடுங்காலமாக மனிதர்களால் எண்ணப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த ஒரு கருதுகோள் குறிப்பிடுவது போல, அண்டவெளியில் ஒரே ஒரு பிரபஞ்சம் இருக்கிறதா அல்லது மறைந்த பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட சில விஞ்ஞானிகள் முன்மொழிந்தது போல, அண்டவெளியில் பல பிரபஞ்சங்கள் இருக்கின்றனவா என்பது விவாதத்துக்கும், ஆய்வுக்கும் உட்படுத்த வேண்டிய கருத்தாக்கம்.
ஆனால், நம் பிரபஞ்சத்தில் பல விண்மீன் திரள்கள் (நட்சத்திரக்கூட்டம்) உள்ளன என்பது உறுதிசெய்யப்பட்டுவிட்ட ஒரு உண்மை. நம் பூமியும், சூரியனும் அங்கம் வகிக்கும் சூரிய மண்டலமானது பால்வீதி விண்மீன் திரளில் இருப்பது நமக்கு தெரிந்த செய்திதான். இது போன்ற பல விண்மீன் திரள்கள் நிறைந்த குழுக்களும் (galaxy groups and clusters), அத்தகைய பல நூறு குழுக்கள் நிறைந்த ஒரு அமைப்பு விண்மீன் பெருந்திரள் அல்லது சூப்பர் கிளஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
கற்பனைக்கு எட்டாத அளவுக்கு பெரிய அமைப்பான இந்த விண்மீன் பெருந்திரள்கள், ஒரு கைக்குள் இருக்கின்ற நாணயச் சில்லறைகளைப் போல ‘பல விண்மீன் திரள் குழுக்களைத்’ தன்னுள்ளே கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பூனே நகரத்தில் உள்ள இன்டெர் யுனிவெர்சிட்டி பார் அஸ்ட்ரானமி அண்டு அஸ்ட்ரோபிசிக்ஸ் (Inter University Centre for Astronomy & Astrophysics, IUCAA) ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த விண்வெளி ஆய்வாளர்கள் ஜாய்தீப் பக்சி மற்றும் ஷிஷிர் சங்க்யாயன் தலைமையிலான ஆய்வுக்குழுவானது இதற்கு முன்னர் கண்டறியப்படாத ஒரு அடர்த்தியான விண்மீன் பெருந்திரளை கண்டறிந்து அசத்தியுள்ளது.
சுமார் நானூறு கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த விண்மீன் பெருந்திரளுக்கு, ‘சரஸ்வதி விண்மீன் பெருந்திரள்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், சுமார் 60 கோடி ஒளி ஆண்டுகள் நீளம் கொண்ட சரஸ்வதி விண்மீன் பெருந்திரளானது, சுமார் 2 கோடி நூறு கோடி சூரியன்களுடைய எடைக்கு நிகரான எடைகொண்ட அண்டவெளி அமைப்புகள் உள்ளன என்றும் ஆய்வாளர் ஜாய்தீப்பின் ஆய்வுக்குழுவினர் கணித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
சரஸ்வதி விண்மீன் திரளின் கண்டுபிடிப்பானது முக்கியத்துவம் பெறுவதற்கு காரணம் அதன் அளவோ அல்லது எடையோ அல்ல. மாறாக, இதுவரை இவ்வளவு பெரிய விண்மீன் பெருந்திரள்கள் சில மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதும், அவற்றில் சரஸ்வதி விண்மீன் பெருந்திரளுக்கு முக்கிய இடம் உண்டு என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
உதாரணமாக, நமக்கு அருகில் உள்ள பிரபஞ்சம் ஒன்றில் உள்ள ஷேப்லி கான்சென்ட்ரேஷன் (Shapley Concentration) அல்லது ஸ்லோன் கிரேட் வால் (Sloan Great Wall) ஆகியவற்றை கூறலாம்.
இது தவிர, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சரஸ்வதி விண்மீன் பெருந்திரளில் உள்ள மற்றொரு தனித்தன்மை என்னவென்றால், அது நமக்கு, சுமார் நானூறு கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதுதான். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள விண்மீன் பெருந்திரள்களில் மிகவும் தொலைதூரத்தில் இருப்பது சரஸ்வதிதான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஸ்லோன் டிஜிட்டல் ஸ்கை சர்வே (Sloan Digital Sky Survey) எனும் ஆய்வில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ததன் மூலமாக கண்டறியப்பட்டுள்ள சரஸ்வதி விண்மீன் பெருந்திரள், சுமார் 400 விண்மீன் திரள்களைக் கொண்ட, 43 விண்மீன் திரள் குழுக்கள் மற்றும் பெருங்குழுக்கள் ஆகியவற்றை தன்னுள்ளே கொண்டுள்ளது.
சரஸ்வதி பெருந்திரளில் கவனிக்கவேண்டிய மற்றுமொரு விஷயம் என்னவென்றால், நம் பூமியில் இருந்து நானூறு கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் சரஸ்வதி இருந்தாலும், அதன் ஒளியானது அவ்வளவு தூரம் கடந்து வருவதாலேயே அதனை விண்வெளி ஆய்வாளர்களால் கண்டறிய முடிந்தது. அதுமட்டுமல்லாமல், இவ்வளவு நீண்ட தூரத்தில் உள்ள விண்மீன் பெருந்திரளை ஆய்வு செய்வதன் மூலமாக, மிகவும் இளைய வயது பிரபஞ்சத்தின் பண்புகளை, குணாதிசயங்களை மற்றும் விண்மீன் பெருந்திரள் போன்ற மிகப்பெரிய அண்டவெளி அமைப்புகள் எப்படி தோன்றியிருக்கக் கூடும் என்பது உள்ளிட்ட பல விண்வெளி சார்ந்த உண்மைகளை நாம் அறிந்துகொள்ள முடியும் என்கிறார் ஆய்வாளர் ஜாய்தீப் பக்சி.
நம் பிரபஞ்சத்துக்கு வெறும் ஆயிரம் கோடி ஆண்டுகள் வயதான போதே அதனுள் சரஸ்வதி போன்ற மிகப்பெரிய விண்மீன் பெருந்திரள் தோன்றியிருப்பதற்கு, கருப்பு பருப்பொருள் மற்றும் கருப்பு ஆற்றல் ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலை ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்கின்றனர் ஜாய்தீப் பக்சி மற்றும் ஷிஷிர் சங்க்யாயன் உள்ளிட்ட சில உலக விண்வெளி ஆய்வாளர்கள்.
Related Tags :
Next Story