வீட்டில் சமையல் செய்தபோது கியாஸ் கசிந்து தீ விபத்து:கல்லூரி மாணவி சாவு
வீட்டில் சமையல் செய்தபோது கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
திட்டக்குடி,
திட்டக்குடி அருகே உள்ள ஆதமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகள் வித்யலட்சுமி(19). இவர், அரியலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி விடுமுறை என்பதால் வித்யலட்சுமி வீட்டில் இருந்தார். மாரிமுத்து, தனது மனைவியுடன் காலையில் வயலுக்கு சென்று விட்டார்.
இதையடுத்து மதியம் 12 மணி அளவில் வித்யலட்சுமி கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது கியாஸ் சிலிண்டரில் திடீரென கசிவு ஏற்பட்டு, தீப்பிடித்து எரிந்தது. இதை அணைக்க முயன்றபோது வித்யலட்சுமியின் உடலிலும், கூரைவீட்டிலும் பற்றி எரிந்தது. உடனே அவர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்ற அபயக்குரல் எழுப்பினார்.
இதற்கிடையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் பக்கத்தில் உள்ள இளங்கோவன் என்பவரது கூரை வீட்டிற்கும் தீ பரவியது. தீ விபத்தில் சிக்கிக்கொண்ட வித்யலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 2 கூரைவீடுகள் எரிந்து சாம்பலானது.
இந்த விபத்தில் வித்யலட்சுமியின் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதற்கிடையில் நள்ளிரவில் அவரது உடல் நிலை மோசமானது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே வித்யலட்சுமி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இது தொடர்பாக திட்டக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.