மகன், மகளை கொன்று விவசாயி தற்கொலை குழந்தைகளை வளர்க்க முடியாததால் விபரீத முடிவு


மகன், மகளை கொன்று விவசாயி தற்கொலை குழந்தைகளை வளர்க்க முடியாததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 31 July 2018 4:45 AM IST (Updated: 31 July 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே விவசாயி தனது மகன், மகளை கொன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்த காவக்காரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது 36). விவசாயி. இவருடைய மனைவி சசிகலா. இவர் களுக்கு வீரபத்திரன்(7) என்ற மகனும், விஜயா(4) என்ற மகளும் இருந்தனர். வீரபத்திரன் அங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் சசிகலா கடந்த 2 ஆண்டுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். அதன்பிறகு ராஜகோபால் தனது 2 குழந்தைகளையும் வளர்த்து வந்தார்.

ராஜகோபாலின் தந்தை வெள்ளையன் வெங்காய வியாபாரி என்பதால் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். அவரது தாய் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் ராஜகோபால் அவரே தனியாக குழந்தைகளை கவனிக்க வேண்டிய நிலை இருந்தது. விவசாய வேலைக்கு செல்வதால் குழந்தைகளை அவரால் சரிவர கவனிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து ராஜகோபாலுக்கு அவரது தந்தை 2-வதாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். ஆனால் 2-வது திருமணத்துக்கு பொருத்தமான பெண் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று காலை வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ராஜகோபால், அவரது மகன் வீரபத்திரன், மகள் விஜயா ஆகிய 3 பேரும் ஒரு வேப்பமரத்தில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக எருமப்பட்டி(பொறுப்பு) இன்ஸ்பெக்டர் தங்கவேலு, சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தனது மனைவி இறந்த பிறகு 2 குழந்தைகளையும் சரிவர கவனிக்க முடியவில்லையே என்ற மனவிரக்தியில் ராஜகோபால் இருந்ததாகவும், இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தனது மகன், மகளை தூக்கில் போட்டு கொன்று விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story