பள்ளிக்கூட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
எட்டயபுரத்தில் பள்ளிக்கூட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
எட்டயபுரம்,
எட்டயபுரத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 1000–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலையில் சுமார் 300–க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென பள்ளி முன்பு மெயின் பஜாரில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் பள்ளி வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டமும் நடத்தினர்.
இந்த கல்வியாண்டில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் பள்ளி நிர்வாகம் சார்பில் வசூல் செய்யப்பட்டு உள்ளது. அதனை திருப்பி வழங்க வேண்டும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். பள்ளியில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலியுறுத்தி மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் தாசில்தார் வதனாள், போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். தாசில்தார் வதனாள் பள்ளி மாணவர்கள், பள்ளி நிர்வாகிகள் ஆகியோரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டு இருக்கிறதா? என்பதை அறிய ஒரு குழு அமைக்கப்படும். இதில் அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தால் அந்த பணம் ஒரு வாரத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. மற்ற கோரிக்கைகள் குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு, தங்களின் வகுப்புகளுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.