மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; பட்டதாரி வாலிபர் உள்பட 2 பேர் பலி மேலும் 3 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; பட்டதாரி வாலிபர் உள்பட 2 பேர் பலி மேலும் 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 31 July 2018 4:15 AM IST (Updated: 31 July 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

உப்பிலியபுரம் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிக்கொண்டதில் பட்டதாரி வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

உப்பிலியபுரம்,

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் பஜனை மடத்தெருவை சேர்ந்த வையாபுரி மகன் விக்னேஷ் (வயது 23) பட்டதாரி. உப்பிலியபுரம் காளிவட்டம் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் கார்த்திக் (19). இவர் துறையூர் அருகேயுள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கார்த்திக்கின் மாமா, துறையூரில் இருந்து பெரம்பலூருக்கு தன்னை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று விடுமாறு அழைத்ததன் பேரில் கார்த்திக், விக்னேஷ் ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் உப்பிலியபுரத்திலிருந்து துறையூர் நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

துறையூர்-தம்மம்பட்டி சாலையில் ஒக்கரை பிரிவு சாலைக்கும், சிக்கத்தம்பூருக்கும் இடையே அவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மொபட்டும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. மொபட்டில் வந்தவர்கள் உப்பிலியபுரம் அருகேயுள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் உறவினர் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்துள்ளனர்.

இந்த விபத்தில் விக்னேஷ், மொபட்டை ஓட்டி வந்த மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சிறுகாம்பூர் செங்குடி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (35) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஆறுமுகம் மனைவி செல்வி(25), சந்திரசேகர் என்பவரது மனைவி கிருபா(24), கார்த்திக் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். கிருபாவின் 1½ வயது பெண் குழந்தை சுபஸ்ரீ காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

விபத்து குறித்து தகவல் அறிந்த உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஷ், ஆறுமுகம் ஆகியோரின் உடல்களை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த கிருபா, செல்வி, கார்த்திக் ஆகியோர் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் செல்வி, கார்த்திக் இருவரும் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story